கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் 18 தொகுதி சட்டமன்றத் தொகுதிகளின்  இடைத்தேர்தலும் நடைபெற்றது. தற்போது சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய  4 தொகுதிகளுக்கு வரும் மே19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையயொட்டி திமுக ,  அதிமுக, அமமுக போன்ற கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று சூலூரில் நடைபெற்றது.

அப்போது  பேசிய திமுக பொருளாளர் துரை முருகன், குறைந்தது 5 அல்லது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் இந்த ஆட்சி நிலைக்கும் எனவே யார் யாரெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராக இருப்பார்கள் என்பதை அறிந்து அவர்களை தகுதிநீக்கம் செய்யும் காரியத்தில் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
.
நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களின் முடிவுகள் வந்தால் ஒன்று அல்லது இரண்டு தான் வரும். மற்றது வராது என்று அவர்கள் கணக்கு போட்டு இருக்கிறார்கள். மிச்சத்தை எப்படி பிடிப்பது, இப்போது நடக்கின்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து இறக்கி இருக்கிறார்கள். 

இதற்காக அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் ரூ 10 ஆயிரம் தருவது எப்படியும் ஜெயித்துக்காட்டுவது என்ற நிலையை எடுத்து, கோடிக்கணக்கான பணத்தை கொண்டுவந்து இறக்கி இருக்கிறார்கள். ஆகவே மக்கள் மீது நம்பிக்கையை இழந்து தற்போது பணத்தின் மீது நம்பிக்கையை கொண்டு வந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

பொதுவாக கோவை மக்களை பொறுத்த வரையில் அரசியல் அறிந்தவர்கள், நாட்டு நடப்பு புரிந்தவர்கள், தெளிவானவர்கள், எனவே பணத்துக்கு மோசம் போகமாட்டார்கள் என்று நான் கருதுகிறேன் என துரை முருகன் குறிப்பிட்டார்..

50 ஆண்டுகள் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன் என்றும் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுக 100 சதவீதம் வெல்லும். சூலூரை ஜெயித்து கொடுங்கள், 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என துரை முருகன்  சபதம் ஏற்றார்.