கு.க செல்வம் எம்எல்ஏ வைத் தொடர்ந்து திமுகவிலிருந்து அடுத்தடுத்த வெளிநடப்பு இருக்கப்போவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக துரைமுருகன் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாதவரத்தில் கரோனா நோய் சிகிச்சை மையங்களையும்,  ஏழைகளுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார். 

குறிப்பாக சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதேபோல் கு.க செல்வம் எம்.எல்.ஏ. திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், திமுகவில் செல்வத்தைப் போல் மற்றவர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், அடுத்ததாக துரைமுருகன் அக்கட்சியிலிருந்து வெளியேற இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்சியின் பொருளாளராக இருக்கக்கூடிய துரைமுருகன், திமுகவுக்கு பொதுச்செயலாளராக வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாகவும், தற்போது அது கிடைக்காது என்பதால், அந்த ஏக்கத்தில் அவர் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

திமுகவில் இருந்து யார் வந்தாலும் கட்யின் ஆலோசனைக்கேற்ப அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கூறினார். 
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் முருகன் ஆட்சி விரைவில் வரும் என்று கூறிய பாஜகவினரின் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் ஜாதி, மதம் இல்லாத ஒரு ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதே ஆட்சிதான் என்றுமே நீடிக்கும் என்றும் கூறினார்.