தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இன்று காலையில் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகனின் வலது புறம் கூட்டணி கட்சியினர் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. கூட்டம் துவங்கும் முன் அவரை பார்த்து துரைமுருகன் ‘என்னாங்க எங்க கட்சி ஆம்பளையுமில்லை, பொம்பளையுமில்லையாம்! அப்படின்னா நாங்க திருநங்கையா? இல்லை திருநம்பியா? உங்க கட்சியின் சர்வதேச லீடர் வேலுச்சாமிட்ட இப்பவே கேட்டுச் சொல்லுங்க.’ என்று ஆத்திரம் கலந்த நகைச்சுவையாய் கேட்டுவிட்டு சிரித்தார். 
அழகிரிக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. இருந்தாலும் சமாளித்தவர் ‘விடுங்கண்ணே. அதை பெருசா எடுத்துக்கிட்டு’ என்று டாப்பிக்கை மாற்றினார். ஆனாலும் துரைமுருகன் விடுவதாக இல்லை. ’என்னைய கூட பைத்தியக்காரன், கீழ்பாக்கத்தில் சேர்க்கணும்னு சொல்லி இருக்கிறார்!’ என்று மீண்டும் வம்பை இழுத்தார். அழகிரியால் நிமிர முடியவில்லை. இதற்குள் டி.ஆர்.பாலு போன்றோர் உள்ளே நுழைந்து,  அந்த இடத்தை சுமூகமாக்கியிருகின்றனர். 


துரைமுருகன் இந்தளவுக்கு கொதிக்க காரணம்?...தமிழக காங்கிரஸில் ஒரு காலத்தில் கோலோச்சிய அதிரடிப் பேர்வழியான திருச்சி வேலுச்சாமியின் பேட்டிதான். தி.மு.க.வுக்கும், தமிழக காங்கிரஸுக்கும் இடையில்  கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சில பிரச்னைகள் ஓடியது. உடையும் நிலைக்கு சென்று கூட்டணி காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘தமிழக காங்கிரஸுக்கு வாக்கு வங்கியே கிடையாது. அவங்க பிரிஞ்சு போனாலும் கவலையில்லை’ என்று வெளுத்திருந்தார் துரைமுருகன். இதற்கு பதிலடி தந்த வேலுச்சாமி, ஒரு அரசியல் புலனாய்வு பத்திரிக்கை பேட்டியில்தான் துரைமுருகனை கடுமையாய் விமர்சித்ததோடு “காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்துவிட்டு, பின் அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் அது எங்கள் சொந்த கருத்து என்று சொல்கிறார்கள். அவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்றால், நாங்கள் முதற்கட்ட தலைவர்கள். பதவியில் இருப்பது மட்டுமே தலைமைக்கு தகுதியா? தலைமைக்கு தெரியாமல் பேசினார்கள் என்றால், ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தி.மு.க. இல்லை என்றுதானே அர்த்தம். சொல்லிய கருத்தை ‘என் கருத்து’ என்று சொல்லக்கூடிய துணிச்சல் இல்லாத கோழைகள் எதற்குப் பேச வேண்டும்? ஒன்று ஆணாக இருங்க, அல்லது பெண்ணாக இருங்கள். மூன்றாம் பாலினமாக தி.மு.க.வினர் இருக்க வேண்டாம்.’ என்று சொல்லியிருந்தார். 

இதை வைத்துதான் இன்று அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரியை நோண்டி நொங்கெடுத்துவிட்டார் துரைமுருகன். சமாதானம் செய்ய சென்ற தி.மு.க.வினரிடமும் ‘அட அந்தாளு என்னைய பைத்தியமுன்னு சொல்லியிருக்கார். அதை நான் மன்னிச்சுட்டேன். ஆனால் நம்ம இயக்கத்தை ‘மூன்றாம் பாலினம்’ அப்படின்னு சொல்லியிருக்கார். மூன்றாம் பாலினமாக நாங்கள் இருப்பதில் வெட்கமில்லை. காரணம், திருநங்கைகளும், திருநம்பிகளும் போற்றுதற்கும், சாதனைக்கும் உரிய நபர்களே. ஆனால் இந்த மூன்றாம் பாலினத்தை நம்பித்தானே காங்கிரஸின் வண்டி ஓடுது தமிழ்நாட்டில்.” என்று கொதித்திருக்கிறார் துரை. வேலுச்சாமியின் பேச்சுக்கு இணையத்தில்  தி.மு.க.வினரோ ‘யாரை ரெண்டும் கெட்டான் என்கிறாய்? பதவிப் பல் பிடுங்கப்பட்ட வயதான நாகமே! வாயை மூடி ஓரமாக சுருண்டு கிட’ என்று துவங்கி வகை வகையாய் திட்டித் தீர்த்து எழுதியுள்ளனர். ஆக! இந்த பஞ்சாயத்து இப்போதைக்கு அடங்காது போல.