Durai Dayanidhi Vaiko made fun
திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து செயல்படும் என்று வைகோவின் கருத்துக்கு, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, அப்படி எல்லாம் பேசாதீங்க.. பாவம் நாங்க என்று கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதிமுகவின் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம், மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிட இயக்கத்தைக் காக்கவும், மாநில சுயாட்சி கொள்கைக்கு வலூவட்டவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திமுக கூட்டணியில், மதிமுக தொடர்ந்து செயல்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து, நெட்டிசன்கள் கலாய்த்து பதிவிட்டிருந்தனர். மக்கள் நலக் கூட்டணியில் வைகோ இணைப்பால்தான், கூட்டணி காணாமல் போனது என்று தங்களது கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பை வைகோ வெளியிட்டிருந்தார். இதற்கும் நெட்டிசன்கள் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திமுக இனி வெற்றி பெறாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது திமுகவில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று வைகோ கூறியிருந்தது தொடர்பாக அந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
துரை தயாநிதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அப்படி எல்லாம் பேசாதீங்க... ப்ளீஸ்... பாவம் நாங்க... என பதிவிட்டுள்ளார். துரை தயாநிதியின் இந்த பதிவுக்கு, பலரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.
