முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி உர நிறுவனமான கோத்தாரி குழுமத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும் அதற்குப் பதிலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி பில்டிங் கட்டிடத்தை துரை தயாநிதி தன் வசப்படுத்தியதாகவும் சிபிஐக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து,  துரை தயாநிதிக்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டதாகவும், இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜராகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துரை தயாநிதி பெயரில் உள்ள சில வழக்குகளை சிபிஐ இப்போது கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த் அல்லது மு.க.அழகிரியை தனிக் கட்சி தொடங்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதனையடுத்து, மு.க.அழகிரியை பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அழகிரி வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்திருந்தார். ஆனால், மு.க.அழகிரியோ தான் பாஜகவில் சேர இருப்பதாக சிலர் காமெடி செய்கிறார்கள் என்று கடுமையாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.