Driver saleem save 52 yathreegars

அமர்நாத்தில் தீவிரவாத தாக்குதலிலில் இருந்து 52 யாத்ரிகர்களின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் ஷேக் சலிம் கஃபூருக்கு, வீரதீர செயல்களுக்கான, நாட்டின் 2-வது உயர்ந்த விருது நாளை வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ,இவருக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 10-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஆனந்த் நாக் மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்கள் ஒரு பள்ளததாக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் யாத்ரீகர்கள் மீது சராமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது,அந்த பேருந்தின் ஓட்டுநர் ஷேக் சலிம் கஃபூர் , பேருந்தை நிறுத்தாமல் தீரத்துடன் ஓட்டி, அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார். அந்த பேருந்தை சிறைப்பிடிக்க தீவிரவாதிகள் முயன்றபோது, மின்னல் வேகத்தில் பேருந்தை ஓட்டி யாத்ரீகர்களுடன் தப்பி வந்தார்.

அந்த ஓட்டுநர் சிறிது நேரம் அங்கு வண்டியை நிறுத்தியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக 60 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருப்பார்கள், எப்படியோ தப்பித்து அங்கிருந்து யாத்ரீகர்கள் வந்து சேர்ந்தனர்.

இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டதோடு, 19 பேர் படுகாயம் அடைந்தனர் ஆனாலும் 52 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர். அந்த சமயத்தில் துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை வேகமாக ஓட்டிச் செல்லும் சக்தியைக் கடவுள் எனக்கு அளித்தார் என்றும், பாதுகாப்பான இடம் வரும் வரையில் பேருந்தை நிறுத்தவே இல்லை என்றும் ஷேக் சலிம் கஃபூர் பின்னர் தெரிவித்தார்.

ஷேக் சலிம் கஃபூரின் வீரதீர செயலை அனைவருமே பாராட்டினர், அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியும் பாராட்டினார்

இந்நிலையில் துணிச்சலாக செயல்பட்டு 52 யாத்ரீகர்களின் உயிர்களைக் காப்பாற்றிய கஃபூருக்கு இந்தியாவின் 2-வது உயர்ந்த விருதான உத்தம் ஜீவன் ரக்ஷா விருது நாளை வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நடைபெறவுள்ள விழாவில் ஷேக் சலிம் கஃபூக்கு இந்த விருதை வழங்குகிறார். நாளை விருது வாங்கப் போகும் ஷேக் சலிம் கஃபூருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.