Asianet News TamilAsianet News Tamil

வெறியாட்டத்தையும், சில்லுண்டி சேட்டைகளையும் தொடருங்கள்.! அறுவடைக்கு காத்திருக்கிறது கருப்புச்சட்டை - கி.வீரமணி

பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில், அதிமுக அரசை டார்கெட் செய்து, ஆட்சியாளர்களை நோக்கி தொடர்ந்து கேள்வியெழுப்பிவருகிறார் கி.வீரமணி.
 

dravidar kazhagam k veeramani statement on periyar statue insult
Author
Chennai, First Published Jul 19, 2020, 3:16 PM IST

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து திருக்கோவிலூரில் பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. காவிச்சாயம் பூசப்பட்ட விவகாரத்திலேயே பெரியாரிஸ்ட்டுகள் கோபமாக இருக்கும் நிலையில், செருப்பு மாலை போட்டது, அவர்களது ஆதங்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், கோவையில் தந்தை பெரியார் சிலைமீது காவிச் சாயம், முதல் நாள் இரவு ஒரு காவி, ஒரு காக்கி ஊற்றியுள்ளார்! அவர் ‘‘தானே’’ சரண் அடைந்ததாகக் கூறிய வாக்குமூலத்தில் ஒரு அனாமதேய அமைப்பு - சங்கிகள் பலர் சங்கை சிறிதும் இல்லாமல் இப்படி பல அமைப்புகளில் இயங்கி வருவது தமிழ்நாட்டு காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அறியாமல் இருக்க முடியாது.

இருந்தாலும், அத்தகைய நபர்கள் - கொலைக்குக் கூலிப் பட்டாளம் கிடைப்பதுபோல், தூண்டிவிடும் தூமகேதுகள் பின்னணியில் இருந்துகொண்டு - மறைந்து நின்று வாலியின்மீது அம்பு எய்திய இராமன் கதைபோல, செய்யத் தூண்டுகிறார்கள். தனிப்பட்ட அம்புகள்மீது நடவடிக்கை பாய்ந்தால் மட்டும் போதாது; அதற்கு மூலகாரணம் அந்த அம்புகளை ஏவி விட்டவர்கள் திட்டமிட்டுதானே இதைச் செய்யவேண்டி தூண்டப்பட்டிருக்க வேண்டும்; அவர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொண்டால்தான் இம்மாதிரி ஈனச் செயல்களை மீண்டும் மீண்டும் தொடராத நிலை ஏற்படும்; தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அச்சுறுத்தல் அல்லவா?

முதலமைச்சரின் பதில்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம், ஈரோட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘’ என்று தனது வழமையான பதிலைக் கூறினார்; மற்றொரு அ.தி.மு.க. பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து, ‘‘சட்ட நடவடிக்கைகள் தொடரும்‘’ என்றார்!

அதே நாளில் (நேற்று 17.7.2020) பிற்பகலில் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள தந்தை பெரியார் சிலைமீது செருப்பு மாலை போடப்பட்டிருப்பதாக அறிந்து, திருக்கோயிலூர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தனர். தி.மு.க. சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும்கூட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு கண்டன முழக்கம் எழுப்பி, குற்றவாளிகளைக் கைது செய்ய ஆர்ப்பாட்டத்தினை அறவழியில் நடத்தியுள்ளனர்!

dravidar kazhagam k veeramani statement on periyar statue insult

முதல்வரும், அமைச்சரும் கூறியதில் எந்தப் பொருளும் இல்லை என்பதைத்தானே இந்த திருக்கோயிலூர் - தொடர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்ச்சி காட்டுகிறது? கடும் நடவடிக்கைக்கு எது தடை? கூட்டணி தர்மமா? நமக்குப் புரியவில்லை.

ஆரியத்தை அலறச் செய்யும் அணுகுண்டாய்த் தெரிகிறார்

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஆனாலும், உலகில் தத்துவமாய் வாழுகிறார்; அதுவும் ஆரியத்தை இன்னும் அலறச் செய்யும் அணுகுண்டாய்த் தெரிகிறார் என்பதற்கு இந்தக் காவிகளின் காலித்தன கீழ்த்தர நடவடிக்கைகளே சான்று!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் வாழ்க்கையில் சந்திக்காத எதிர்ப்பா? தி.மு.க. தலைவர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்த கண்டன அறிக்கையில் தெரிவித்ததுபோல,
‘‘என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்’’
என்று கூறியபடி தரணி காணா தன்னேரில்லாத தலைவர் அவர்; இன்றும் வாழுகிறார் கொள்கை லட்சியங்களாக - இன்றும் காவிக் கிருமிகள் தமிழ்நாட்டு மக்களுக்குள் நுழையாத தடுப்பூசியாகப் பயன்படுகிறார் என்பதைத்தானே சிலையை அவமதிக்கும் சிறுமதியாளர்களின் சினம் காட்டுகிறது?

ராகுல் காந்தி கருத்து

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எவ்வளவு தீவிரமான வெறுப்பும், ஒரு மகத்தான தலைவரைக் களங்கப்படுத்த முடியாது’’ என்று ராகுல்காந்தி அவர்கள் டுவிட்டரில் தமிழில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வரலாறு தெரியா வக்கிர புத்திக்காரர்களே, கடலூரில் தன்மீது போடப்பட்ட ஒரு செருப்புக்குப் பிறகு மற்றொரு செருப்பையும் பெற்று பாதுகாத்தவர் புரட்சியாளர் பெரியார் என்பது தெரியுமா?

சிவகங்கையில் பழைய செருப்புத் தோரணம் கட்டி வரவேற்றபோது (அறிஞர் அண்ணாவும் ஊர்வலத்தில் பெரியாரோடு அமர்ந்திருந்தார்) செருப்புத் தோரணத்தைப் பிய்க்க ஆத்திரப்பட்ட கழகத் தோழர்களை அப்படியே இருக்கட்டும் என்று ஆணையாக - பதில் கூறிய பகுத்தறிவுப் பகலவனின் நெஞ்சுரம்பற்றி தெரியுமா? பேதைகளே, காலிகளே, உங்களுக்கு!
அய்யா பெரியார் செருப்புத் தோரணம் பற்றி என்ன பதில் கூறினார் தெரியுமா?

பழைய செருப்பைத் தேடித் தேடி, ஓடி சேர்த்த உங்களுக்குச் சொல்கிறேன், ‘‘இராமராஜ்ஜியம் என்று இராமாயணத்தில் 14 ஆண்டுகள் ‘பாதுகா பட்டாபிஷேகம்‘ என்ற நாமத்தோடு ஆண்டதாக வரலாறு உண்டே! என்மீது செருப்பு என்றால், ஆளும் ராஜமரியாதை என்பதுதானே உங்கள் புராண நம்பிக்கை மதிப்பீட்டின்படி அர்த்தம்‘’ என்று கூறி, செருப்பைத் தேடியவர்கள் அதனைக் கொண்டே தங்கள் தலையில் அடித்துக் கொள்ளச் செய்தவர் தனது அறிவின், துணிவின் திறத்தால் புரிந்துகொள்ளுங்கள்!

dravidar kazhagam k veeramani statement on periyar statue insult

அடிக்க அடிக்க எழும்பும் பந்து எங்களது திராவிடர் இயக்கம்!

அடிக்க அடிக்க எழும்பும் பந்து எங்களது திராவிடர் இயக்கம், எதிர்ப்பென்னும் உரத்தால், செழிக்கும் பயிர் - கொழிக்கும் பண்ணை. செய்யுங்கள், தொடருங்கள், அதன்மூலம்தான் மீண்டும் காவியை அடியோடு துடைத்தெறிய துளியும் சஞ்சலம் அற்ற சரியான முடிவு வரும் - வாய்ப்பு விரைந்து வரும்! நீட்’ தேர்வு, கரோனா தொற்று பரவல், தொடர் சாவுகள், வேலையின்மை, வறுமையின் வாட்டம், பசி, பட்டினி, ஆட்சியாளரின் வித்தைகள் - இவற்றை திசை திருப்ப, தோல்வி முகங்களை மறைக்க காவிச் சாயப் பூச்சுதான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ள வியூகமா?

கருப்புச்சட்டைப் படை களத்தில் என்றும் காத்திருக்கிறது

முயன்று பாருங்கள் - களத்தில் வெறி யாட்டம் ஆடுங்கள்! வரவேற்கிறோம் - கழகங்கள் வளர, கழக ஆட்சி மலர வேகப்படுத்தும் உங்களது சில்லுண்டி சேஷ்டைகள் தொடரட்டும்! நாங்கள் அந்த அறுவடைக்குக் காத்திருக்கிறோம் - கருப்புச்சட்டைப் படை களத்தில் என்றும் காத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios