திராவிட கழகம் இவ்வளவு நாட்கள் தமிழக மக்களை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியது போல் இனி ஏமாற்ற முடியாது எனவும் இனி தமிழகத்தில் உங்கள் பருப்பு வேகாது ஸ்டாலின் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் எதிர்கட்சிகளின் நீட் எதிர்ப்புக்கு முறியடிப்பு பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. 
இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலாளர் ஹச். ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழிசை,  முக ஸ்டாலினால் கேள்விகள் கேட்க மட்டுமே முடியும், ஆனால் எங்களுக்கு  கேள்விகள் கேட்கவும் தெரியும் பதில் சொல்லவும் தெரியும் என தெரிவித்தார். 

ஸ்டாலின் முதலில் திமுகவுக்கு தலைவராகட்டும் பிறகு முதலமைச்சராகட்டும் என வினவினார். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட சொல்ல முடியாத மோடியை மோசடிக்காரர் என்று சொல்கின்றனர். திராவிட கழகத்தை பாஜக ஓரங்கட்டும் என தமிழிசை தெரிவித்தார். 

நீட் தேர்வு விவகாரம் அரசியலாக்கப்படுகிறது  எனவும், தமிழகத்தில் எதிர்மறை அரசியல் நடக்கிறது எனவும் குறிப்பிட்டார். 
செப் 20 க்கு பின் திராவிட முன்னேற்ற கழகமா அல்லது திகார் முன்னேற்ற கழகமா என தெரியும்  எனவும், மாணவி அனிதாவின் மரணத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் எனவும் தமிழிசை குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தார் தமிழிசை. 
மேலும் திராவிட கழகம் இவ்வளவு நாட்கள் தமிழக மக்களை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியது போல் இனி ஏமாற்ற முடியாது எனவும் இனி தமிழகத்தில் உங்கள் பருப்பு வேகாது ஸ்டாலின் எனவும் தெரிவித்தார்.