ஜெயலலிதாவை ரிவென்ஞ் எடுக்கும் விதமாக 18 வருடங்களுக்குப் பின்  ஒட்டுமொத்த அதிமுகவை தைலாபுரத்திற்கு வரவழைக்கவுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

எதிர்பார்த்தைதை விட திகட்ட திகட்ட கொடுத்த அதிமுகவால் உற்சாகத்தில் இருக்கும் தைலாபுரம் டாக்டர்ஸ், முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்பட அமைச்சர்கள் எல்லோருக்கும் தடபுடலாக விருந்துக்கு அழைத்தார் ராமதாஸ். அந்த விருந்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்பட அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள். 

முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டம் செல்வதால் அப்படியே 18 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்கின்றனர் அதிமுகவினர். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது பாமக. அப்போது பாமகவுக்கு தமிழ்நாட்டில் 28 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 15 தொகுதிகளும் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. பாண்டிச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அதிமுக 15 தொகுதிகளிலும், பாமக 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், அதிமுக இரண்டரை வருடம் வருடம் ஆட்சி செய்வது என்றும், பாமக இரண்டரை வருடம் ஆட்சி செய்வது என்றும் பொது ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். 

புதுவையில் ஜெயலலிதாவும், ராமதாசும்  பிரச்சாரம் செய்தனர். பாண்டிச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திண்டிவனம் வழியாக சென்னை செல்வதாக இருந்தார் ஜெயலலிதா. அப்போது மதியம் தைலாபுரம் தோட்டத்தில் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார் ராமதாஸ். அதற்கு ஜெயலலிதாவும் ஓகே சொன்னதால் விருந்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக அமைந்தது. ஜெயலலிதாவின் வருகையால் தைலாபுரம் தோட்டம் அமைந்திருக்கும் பகுதியில் தொண்டர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. ஆனால், பாண்டிச்சேரியில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, பாமகவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதை தெரிந்து கொண்டதோடு, ராமதாஸ் நம்மை ஏமாற்றி இப்படி 15 தொகுதிகளை வாங்கிக் கொண்டாரே என கடுப்பாகியுள்ளார். 


 
ஜெயலலிதா வருகிறார் என்று பாண்டிச்சேரி - திண்டிவனம் ரோட்டில் இருக்கும் தைலாபுரத்திற்கு முன்னாடி இருக்கும் ஊரில் காத்திருந்தார் ராமதாஸ். ஆனால், ஜெயலலிதா வந்த கார் ராமதாஸை பார்த்தும் நிற்காமல் வேகமெடுத்தது பறந்தது. இந்த விருந்தை புறக்கணித்து ராமதாஸ்க்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டு சென்றார் ஜெயலலிதா. 

சுமார் 18 வருடங்களுக்குப் பின் ஜெயலலிதாவை ரிவென்ஞ் எடுக்கும் விதமாக இன்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் என ஒட்டுமொத்த அதிமுகவையும் தைலாபுரத்திற்கு வரவழைக்கவுள்ளார்.

ஒட்டுமொத்த அதிமுகவையும் தைலாபுரத்திற்கு வரவழைத்த குஷியில் இருக்கும் பாமகவினருக்கு பதிலடி கொடுக்கும் அதிமுக தொண்டர்கள், அம்மா இருந்த வரை தைலாபுரம் வரவில்லை, அவர் இறந்த பின்பு தான் அவரால் அதை செய்ய முடிந்தது என மார்தட்டிக் கொள்கின்றனர்.