திருமாவளவன் நடத்தும் விடுதலை சிறுத்தைகள் எல்லாம் ஒரு கட்சியா? அந்த கட்சி நாட்டுக்கு தேவையே இல்லை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாகத் தாக்கியுள்ளார். 

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் திருமாவளவன். அதே தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "சிதம்பரத்தில் அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும். அவருக்கு ஒரு அடையாளத்தை தந்தது யார் தெரியுமா? நான்தான்.

அன்றைய காலங்களில் மதுரை வட்டார சுவர்களில் எல்லாம் வீச்சரிவாளுடன் ரத்தம் சொட்டும் காட்சிதான் நிறைய பார்க்க முடியும். இப்படி ஒரு நிலைமையை மாற்ற வேண்டும் என்று நினைத்தே திருமாவளவனுடன் கூட்டு சேர்த்தேன். அவருக்காகவே நிறைய பொதுக்கூட்டம் நடத்தி, அதில் அவரை பேச வைத்தேன்.

மதுரையிலிருந்து அவரை கூட்டி வந்து அரசியல் அறிமுகம் செய்து வைத்தேன். கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் பயிலரங்கம் ஒன்று நடத்துங்கள், அவர்களை நல்வழிப்படுத்துங்கள் என்று சொன்னேன். ஆனால் அதை அவர் கேட்கவே இல்லை. அதற்கு பதிலாக அவருடைய இளைஞர்களுக்கு வேறு மாதிரி பயிற்சி தந்து வைத்திருக்கிறார் என்று பிறகு தான் எனக்கு தெரியவந்தது. விடுதலை சிறுத்தை கட்சி கொடியை பார்த்தாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

பிறகு 2 பேரும் இணைந்து பல்வேறு இயக்கங்களை நடத்தினோம். அதனையொட்டி தமிழ் குடிதாங்கி என்ற பட்டமும், அம்பேத்கர் விருது வழங்கினார். ஆனால், அவரது போக்கு, மக்களுக்கு எதிராக இருந்தது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில்தான் இருந்தது. முதலில் அவர் நடத்துவது கட்சியே இல்லை. அந்தக் கட்சி நாட்டுக்கு தேவையே கிடையாது. தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் அவரை அறிமுகம் செய்து வைத்தது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்.

இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்னன்னமோ செய்து வருகிறார். கோபத்தில் எதைஎதையோ பேசுகிறார். அவங்க அப்பா கருணாநிதியிடம் சொல்லி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க செய்தது யார் தெரியுமா? நான்தான். ஆனால், என்னைப் பற்றியும் ஏதோதோ பேசுகிறார். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை கிடையாது" எனத் தெரிவித்தார்.