மகேந்திரன் திமுகவில் இணைவது அக்கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் பெரும்பலனாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகினர். மநீம நிர்வாகிகள் பொன்ராஜ், சிகே குமரவேல், மௌரியா, சந்தோஷ்பாபு எனப் பலரும் கட்சியிலிருந்து விலகினர். கட்சியில் கமலுக்கு அடுத்து முக்கிய முகமாக அறியப்பட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரனும் விலகியது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளின் குரலுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் கடுமையாக விமர்சனங்களை அவர் முன் வைத்து கட்சியிலிருந்து அவர் விலகினார். அப்போதே அவர் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன் நாளை திமுகவில் இணைகிறார். நாளை மாலை ஐந்து மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைகிறார்.
கொங்கு மண்டலத்தில், திமுக பலவீனமாக உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலிலும்கூட கொங்கு மண்டலத்தில் பல இடங்களில் திமுக தோல்வி அடைந்தது. கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும்கூட திமுகவால் வெல்ல முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைவது அக்கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் பெரும்பலனாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
