Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்துக்கு ஒரு தலைநகரமல்ல... மூன்று தலைநகரங்கள் வேண்டும்.. கிருஷ்ணசாமியின் அதிரிபுதிரி கோரிக்கை..!

சென்னை, திருச்சி, கோவை, என்ற மூன்று தலைநகர கொள்கையை அமலாக்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய  தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

Dr.Krishnasamy demands 3 capitals to  Tamil nadu
Author
Chennai, First Published Aug 17, 2020, 8:53 PM IST

தமிழகத்தில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்த கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து இதே கருத்தை அமைச்சர் செல்லூர் ராஜூவும் தெரிவித்தார். இதனையடுத்து திருச்சியை தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஊடகங்களில் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Dr.Krishnasamy demands 3 capitals to  Tamil nadu
அதில், “8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மாநிலமான தமிழ்நாட்டிற்கு மதுரையை மையமாக வைத்து மற்றொரு தலைநகர் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. 2011-ம் ஆண்டு நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், ஆண்டிற்கு இருமுறையாவது மதுரையை மையமாக வைத்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அது சட்டப்பேரவை நடவடிக்கை பதிவேடுகளில் பதிவாகியிருப்பதை அனைவரும் காணலாம்.
தமிழகத்தின் எல்லை 1000 கி.மீ. நீளமும், 500 கி.மீ. அகலமும் கொண்டது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தலைநகரான சென்னையை சென்றடைய ஒரு நாள் முழுமையாகிறது. திரும்பவதற்கும் ஒரு நாள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வாழக்கூடிய லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.Dr.Krishnasamy demands 3 capitals to  Tamil nadu
பெரும்பாலான பெரும் தொழிற்சாலைகள் சென்னையை சுற்றியுள்ள சில மாவட்டங்களிலேயே அமைவதால், அப்பகுதி மக்கள் மட்டுமே பயனடைகிறார்கள். அல்லது பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் வேலையை தேடி அம்மாவட்டங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தலைநகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள தென்மாவட்டங்கள் நேரடி கவனிப்பின்றி தனித்து விடப்படுகின்றன. தொழில், மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இம்மாவட்ட மக்கள் மிகவும் பின்னடைவை சந்திக்கின்றனர். அதேபோல, பன்னெடுங்காலமாக லட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்த கோவையைச் சுற்றியுள்ள மேற்கு மாவட்டங்களும் முக்கியத்துவத்தை இழப்பதால் பொலிவிழந்து வருகின்றன. எனவே, திருச்சி, கோவையை மையமாக வைத்து இரு புதிய தலைநகரங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.Dr.Krishnasamy demands 3 capitals to  Tamil nadu
திருச்சியை மையமாகக் கொண்டு ஒரு தலைநகர் உருவானால், 15 மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றி இருக்கக் கூடிய பல பகுதிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். கோவையை மையமாகக் கொண்டு ஒரு தலைநகர் உருவானால் நீலகிரி சுற்றுலாத்தலமாகவும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நூற்பாலையை அடிப்படையாக கொண்ட பல தொழில்கள் பெரும் வளர்ச்சி அடையும். திருச்சி தலைநகராக வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த பொழுதே தமிழ்நாட்டின் தலைநகரையே திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார். ஆனால், எம்.ஜி.ஆர் அந்த கருத்தை முன்வைத்தார் என்பதற்காகவே ஒரு சில தலைவர்களும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக அது அப்பொழுது கைவிடப்பட்டது.

Dr.Krishnasamy demands 3 capitals to  Tamil nadu
எனவே, தமிழகத்தின் மையப்பகுதி, ஏற்ற தட்பவெப்பநிலை, காவேரி ஆற்றின் கரையிலே இருப்பதால் போதுமான குடிநீர் போன்ற பல சாதக அம்சங்கள் திருச்சியை மையமாக வைத்து தலைநகர் அமைய ஏதுவான சூழல் ஆகும். எனவே, சென்னை, திருச்சி, கோவை, என்ற மூன்று தலைநகர கொள்கையை அமலாக்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இது குறித்து தமிழக மக்கள் பொதுக் கருத்துருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அறிக்கையில் அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios