ரஜினி கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அவரது மக்கள் மன்றத்திற்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள். இப்போது ரஜினிக்கு அடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தில் கோலோச்சி வந்த கடலூர் டாக்டர்.என்.இளவரசன் அனைத்து பொறுப்புகளிடம் இருந்தும் விடுக்கப்படுவதாக ரஜினிமக்கள் மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ரஜினி மக்கள் மன்றத்தின்  சார்பாக வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர்.என்.இளவரசன் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க ரஜினி மக்கள் மன்றத்தில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

 

ரஜினி மன்றத்தில் இருந்து இளவரசன் ஓரம் கட்டப்பட்டு வைத்திருப்பது தொடர்பாக கடந்த மாதமே ஏசியா நெட் ’அப்பிடியே ஓடிரூ...’ முக்கிய நிர்வாகியை விரட்டியத்து ரஜினி அதிரடி..! என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். 

அந்தத் தகவல்கள் ஒருமாதம் கழித்து அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்பது தான் விதி. ஆனால், மாநில அமைப்புச் செயலாளர், ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர், கடலூர் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் என ஒரே நபர் பல பொறுப்புகளை வகித்து வந்தது கடலூர் இளவரன் மட்டுமே. அந்த அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தவர் இளவரசன். சகல அதிகாரங்களையும் கொடுத்து வைத்திருந்தார் ரஜினி. இளவரசனின் அதிரடி நடவடிக்கைகளால் பல ஆண்டுகள் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களே வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அப்படிப்பட்ட இளவரசனை இப்போது வீட்டுக்கு விரட்டியடித்து இருக்கிறார் ரஜினி.

 

லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜூ மகாலிங்கமும், வி.எம்.சுதாகரும் ஆரம்பத்தில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால், பேட்ட படத்திற்கான ஷூட்டிங்கிற்காக ரஜினி வடமாநிலத்தில் இருந்த போது சுதாகர், ராஜூ மகாலிங்கம் ஆகிய இருவர் மீதும் அடுக்கடுக்காக புகார்கள் பறந்தன.

இதனால், ஷூட்டிங் இடைவெளியில் சென்னை திரும்பிய ரஜினி, சுதாகர், ராஜூ மகாலிங்கத்தை ஓரம் கட்டினார். பின்னர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்.இளவரசனை ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழக- புதுவை மாநில அமைப்புச் செயலாளராக அறிவித்து அவரை வழிநடத்த அறிவுறுத்தினார் ரஜினி. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளவரசன் மன்றத்தினரின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து ரஜினிக்கு அனுப்பி வந்தார்.

மன்றக்கூட்டங்களை பல பகுதிகளிலும் நடத்தி வந்த இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்கவராக கோலோச்சினார் ''மன்றத்தில் கட்டுக்கோப்புடன் இல்லாதவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள்'' என கறாராக பேசி நடவடிக்கை எடுத்து வந்தார். இது நிர்வாகிகள் மத்தியில் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. ’’நிர்வாகிகள் மீது இளவரசன் அனுப்பும் புகார் பட்டியல்களை வைத்து கண்ணை மூடிக்கொண்டு ரஜினி நடவடிக்கை எடுத்து விடுகிறார். அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறார்’ எனக் கொதித்தெழுந்தனர் நிர்வாகிகள்.

’’எத்தனையோ ஆண்டுகள் ரசிகராக இருந்து, கஷ்டப்பட்டு உடனிருந்த பலரையும் முக்கிய பொறுப்புகளில் ரஜினி நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அலையடித்து வந்தது. ராஜூ மகாலிங்கம், இளவரசன் என புதியவர்கள் வந்து தங்களை கட்டுப்படுத்துவதால் ரஜினி மீது கோபத்தில் இருந்து வந்தனர் அவரது ரசிகர்கள். இதனால், ரசிகர்கள் பலரும், சில நாட்களாக ரஜினி வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரஜினி, 'இந்தச் சிக்கலை எப்படி அணுகுவது?' என தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார். 

ஒரு கட்டத்தில் மன்றத்தில் இருக்கும் சிலர் கொடுக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஆராயாமல் கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார் கடலூர் இளவரசன். இந்தத் தகவல்கள் ரஜினியின் காதுக்கு சென்றடைய, அதிருப்தியான ரஜினி கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து இளங்கோவனை டம்மியாக்கினார். அடுத்து அவர் ஊர் ஊராய் சென்று ஆய்வு செய்வதற்கு தடை போட்டனர். மன்றப்பணிகளை அலுவலகத்தில் இருந்து கவனித்துக் கொண்டால் மட்டும் போதும் என உத்தரவிடப்பட்டது.

இருப்பினும், இளவரசனின் அதிரடி அதிகரித்தது. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என பலரையும் பந்தாடினார். இதனால் ரஜினி மக்கள் மன்றமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி ரஜினிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. கட்சி ஆரம்பிப்பதற்கும் இப்படியா அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வாகிகளை நிலைகுலையச் செய்வது..? இப்படியே போனால் என்னாவது என்பதை உணர்ந்த ரஜினி, அமெரிக்கா கிளம்பிச் செல்லும் முன் சென்னையில் இருந்த இளவரசனை போனில் அழைத்து, மன்ற அலுவகத்தை பூட்டி விட்டு சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு போய் விடுங்கள். இனி மன்ற விவகாரத்தில் தலையிட வேண்டாம். ஊருக்கு கிளம்புங்கள். இனி வரவேண்டாம்’’ என கறாராக கூறி விட்டு சென்றுள்ளார். ராஜூ மகாலிங்கத்தை அமுக்கி வைத்ததைப் போல் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இப்போது இளவரசனின் பதவியையும் பறித்த்தார் ரஜினி. இப்போது அதிகாரப்பூர்வமாக அவர் மன்றத்தின் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.    

அத்தோடு கட்சி ஆரம்பிப்பதாக அதிரடி காட்டிய ரஜினி இப்போது முன்பை போல மன்ற வேலைகளில் இருந்து விலகி வருகிறார். ரசிகர்களையும், மன்ற நிர்வாகிகளை சந்திப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? என அவரது மக்கள் மன்ற உறுப்பினர்களே சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.