வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏ.சி. சண்முகம் தயாராகிவிட்ட நிலையில், அதிமுகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

திமுக மெகா கூட்டணிக்கு எதிராகவும் அந்தக் கூட்டணிக்கு இணையாகவும் கூட்டணி அமைப்பதில் அதிமுக தீவிரம் காட்டிவருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தேமுதிகவுடன் இழுபறி நீடித்து வருகிறது. மேலும் பாஜகவில் இருந்த உதிரி கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க அதிமுக ஆர்வம் காட்டிவருகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சின்னத்தில் வேலூரில் போட்டியிட்ட புதி நீதிக்கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் ஏ.சி. சண்முகம் தயாராகிவிட்டார் என்பதால், அவருக்கு வேலூர் தொகுதியை அதிமுக தலைமை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் செலவுகளில் தாராளம் காட்டுவார் என்ற அடிப்படையிலும் வேலூர் தொகுதியை ஏ.சி.சண்முகத்துக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஆனால், தொடக்கம் முதலே வேலூர் தொகுதியை ஏ.சி. சண்முகத்துக்கு ஒதுக்க உள்ளூர் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதிமுக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடவே ஏ.சி.சண்முகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த அதிமுகவினர், தற்போது அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்ற வரும் செய்திகளால் நொந்து போயிருக்கிறார்கள். 

இதுபற்றி வேலூர் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ போன தேர்தலில் அம்மா நிறுத்திய வேட்பாளரை தோற்கடிக்க எல்லா வேலைகளையும் ஏ.சி.எஸ். செய்தார். எல்லா தொகுதிகளிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் ஜெயித்த அதிமுக, இங்கே 60 ஆயிரம் ஓட்டுகளில்தான் ஜெயிக்க முடிந்தது. அந்த அளவுக்கு இரட்டை இலை சின்னத்தைத் தோற்கடிக்க கடும் முயற்சி செய்தார் ஏ.சி.எஸ். இந்த முறை அவரே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  

வேலூர் தொகுதியை வேறு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினால்கூட ஏற்றுகொள்வோம். ஆனால். ஏ.சி.எஸ்.க்கு ஒதுக்கக் கூடாது” என்று தெரிவித்தார். ஆனால், ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் தொகுதி நிச்சயம் கிடைக்கும் என்று புதி நீதிக்கட்சியினர் உறுதியாகப் பேசுகிறார்கள்.