அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை முன் வைத்த உருவாகியுள்ள கலகத்தை மேலும் பெரிதாக்கி அக்கட்சியை இரண்டாக உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி ரஜினிக்கு அரசியல் களத்தை தயார் செய்யும் திட்டம் தயாராகி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகால தமிழக அரசியல் களத்தை தீர்மானிப்பது டெல்லியில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள். ஓபிஎஸ்சின் தர்மயுத்தம் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வரை பல முக்கிய நகர்வுகள் டெல்லியில் தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. அதிமுக இரண்டாக உடைந்தது, பிறகு மீண்டும் இணைந்தது, சசிகலா அரசியலில் இருந்து ஓரங்கப்பட்டது என பல முக்கிய அரசியல் நகர்வுகளின் பின்னணியில் டெல்லியில் உள்ள சிலர் உள்ளனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்று தான்.

இதே போல் நடிகர் ரஜினி அரசியல் களம் காணும் விவகாரத்திலும் டெல்லி பின்னணி உண்டு நீண்ட நாட்களாக ஒரு பேச்சு உண்டு. சென்னையை சேர்ந்த பிரபல ஆடிட்டர் ஒருவர் தான் ரஜினியின் அரசியல் நகர்வுகளை திட்டமிடுவதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்த ஆடிட்டர் தான் ஓபிஎஸ்சின் தர்மயுத்தத்தை வடிவமைத்தவர் என்று பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. ஓபிஎஸ் – இபிஎஸ் அணி ஒன்றாக இணையும் சமயத்தில் அமைச்சர்கள் சிலர் அந்த ஆடிட்டரை வீடு தேடிச் சென்று சந்தித்து வந்தது எல்லாம் தனிக்கதை.

ஆனால் கடந்த ஓராண்டாக அதிமுக விவகாரங்களில் டெல்லி மேலிடம் பெரிய அளவில் தலையிடாமல் இருந்து வருகிறது. இதற்குகாரணம் அதிமுகவால் இனி பாஜகவிற்கு பெரிய அளவில் பலன் இல்லை என்கிற முடிவுக்கு வந்தது. தான் என்கிறார்கள். அதே சமயம் அதிமுக மூலமாக எப்படி பாஜகவிற்கு அரசியல் ரீதியிலான பலன்களை தமிழகத்தில் பெறுவது என்று நீண்ட நாட்களாகவே டெல்லியில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரஜினி பாஜகவிற்கு நம்பத்தகுந்த நபராக இருப்பார் என்றாலும் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பில்லை.

ஆனால் ரஜினி தமிழகத்தில் அதிகாரமிக்க நபராக உருவெடுப்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு உதவும் என்று அக்கட்சி மேலிடம் நம்பக்கூடும். எனவே தான் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல முறை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் அதிமுக– திமுக எனும் இரு பெரிய அரசியல் கட்சிகளை எதிர்த்து ஒரு ரசிகர் மன்றத்தால் தாக்குபிடிக்க முடியுமா என்பது தான்.

இதனை ரஜினி அண்மையில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதே சமயம் அதிமுக இரண்டாக உடைக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் தேர்தல் களத்தில் இருந்து அக்கட்சி காணாமல் போய்விடும் என்பது எளிமையான ஒரு புரிதல். மேலும் இதுபோன்ற சமயத்தில் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்து அவர் தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்தால் திமுகவை எளிதாக எதிர்கொள்ளலாம் என்பது டெல்லியின் புதிய வியூகம் என்கிறார்கள். அதிமுக தலைமையில் தேர்தலை சந்தித்தால் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட முடிவு தான் கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.

அதற்கு பதில் ரஜினி தலைமையில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கினால் திமுகவிற்கு சவால் விடுக்க முடியும். எனவே இதனை மையமாக வைத்து முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் கலகத்தை அதிகமாக்கி இரண்டாக உடைக்க முடியுமா என்று சாத்தியங்கள் ஆராயப்படுகின்றன. அப்படியே கட்சி உடைந்தால் இரட்டை இலையை முடக்கி, ரஜினிக்கு பாதை அமைக்கவும் வியூகம் தயாராவதாக சொல்கிறார்கள்.