ஜெயலலிதா பலம் பொருந்திய தலைவர். அவரைப்போல, நீங்களும் நினைத்து கொண்டு தேர்தலை சந்தித்தால் படுதோல்வியை சந்திப்பீர்கள் என திமுக கூட்டணி தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார். 

ஈரோட்டில் கொங்கு மண்டல தேசிய கட்சி மேற்கு மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால், விவசாயம், விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்படுவர். இதையறிந்தும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஆதரவு தருகிறது. இலவச மின்சாரத்தை ஒழிக்கும் வகையில், மின் மீட்டர் பொருத்துவதை நிறுத்த வேண்டும். இந்த ஆட்சியின் ஊழலை, ஆதாரத்துடன் பட்டியலிட்டு, கவர்னரிடம் ஸ்டாலின் வழங்கி உள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என கூறினோம். அவர்களை தப்பிக்க விட்டீர்கள். தற்போது அதிமுக நிர்வாகிகளை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட உள்ளனர். ஜெயலலிதா பலம் பொருந்திய தலைவர். அவரைப்போல, நீங்களும் நினைத்து கொண்டு தேர்தலை சந்தித்தால் படுதோல்வியை சந்திப்பீர்கள். ஒரு சீட்டுக்காக நாங்கள் கட்சியை அடமானம் வைத்ததாகவும், அது கொங்கு மண்டலத்துக்கு அவமானம் என முதல்வர் கூறியுள்ளார்? ஹெலிகாப்டரை பார்த்து கும்பிட்டபோதும், டயரை பார்த்து வணங்கியபோதும், கொங்கு மண்டலத்தின் தன்மானம் உயர்ந்து நின்றதா? என முதல்வர் விளக்க வேண்டும். 

சட்டப்பேரவைத் தேர்தலில் கொமதேக தனித்தும், தனிச்சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என முதல்வர் பேசி இருக்கிறார். ஆனால், இன்னும் சில நாட்கள் பொறுத்து இருந்தால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் இருக்குமா? இருக்காதா? என்பது தெரியவரும். திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. கடந்த காலங்களில் கொமதேக 72 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டுள்ளது. 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை கொண்டுள்ளது. கொமதேகவின் வலிமையை கூட்டணி தலைமை புரிந்துகொண்டிருக்கிறது. எங்களுடைய வலிமைக்கு தகுந்தவாறு தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்றார்.