கொரோனாவை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும், எந்த கட்சியாக இருந்தாலும் மனிதாபிமானத்தோடு கொரோனாவை கையாள வேண்டும் எனவும், தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கத்திப்பாரா ஜெனார்த்தனனின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில், அவரது சிலையை திறந்து வைத்தும், இலவச கொரோனா தடுப்பூசி வாகன சேவையையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களின் சுகாதார தேவைக்காக இன்று கொரோனா தடுப்பூசிக்கான இலவச வாகன சேவையை தொடங்கி வைத்துள்ளதாக கூறினார். கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் பாதித்து வருகிறது, இதனை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அரசின் அறிவுறுத்தல்களை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கொரோனா பற்றி பொதுமக்களை அச்சுறுத்தும் தகவலை யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், மறைந்த நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதே அதிகாரப்பூர்வ தகவல், என்றும், அவருடைய மரணத்தை தடுப்பூசி உடன் தொடர்பு படுத்தி தகவல்களையோ செய்தியையோ வெளியிடக்கூடாது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும், எந்த கட்சியாக இருந்தாலும் மனிதாபிமானத்தோடு கொரோனாவை கையாள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் நலனுக்காக ஓயாது உழைத்து கொண்டிருப்பவர் எனவும், இன்று காலை சிறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவேண்டும் என்றும் கூறினார்.