இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் கர்நாடகத்தில் செயல்பட்டு வந்தன. அவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டa குழந்தைகள் பயின்று வந்தனர்.

ஆனால், இப்போது நூற்றுக்கும் குறைவான தமிழ்ப் பள்ளிகள் மட்டும் தான் அங்கு இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி அந்தப் பள்ளிகளில் தமிழ் மொழியும், தமிழ்வழிக் கல்வியும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

கடந்த ஆண்டு அந்தப் பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 122-ஆக குறைந்து விட்டது. கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழியிலும், தமிழ் மொழியையும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு காரணம் கர்நாடகத்தில் கன்னடம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று தவறாக செய்யப்பட்ட பிரசாரம்தான்.

இந்தப் பிரசாரத்தை நம்பி தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தமிழ் மொழியை படிப்பதைக் கைவிட்டு கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மும்மொழிகளை படிக்கத் தொடங்கியுள்ளனர். இதையே காரணம் காட்டி அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏராளமான தமிழ் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன.

இதே நிலை நீடித்தால், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் வாழும் அவலநிலை ஏற்பட்டு விடும். இதைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

கர்நாடகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிப்பதற்கு வசதியாக அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவையான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் மற்றும் தமிழாசிரியர்களை அனுப்பி வைத்தல், தமிழ்க் கல்வியை விரிவாக்கம் செய்ய தனி வாரியம் ஒன்றை அமைத்து அதற்கு தாராளமாக நிதி உதவி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அங்கு மாணவர்களைத் தமிழ் மொழியைக் கற்க வைக்க முடியும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.