dont believe all comes around social medias as what ever the criticism
நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாகச் சொல்லி, என் பெயரில் பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். நகைச்சுவைக்காகச் செய்யும் அவற்றை நம்ப வேண்டாம் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.
உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள். - என்று கூறியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதை அடுத்து அவர் குறித்து பலரும் பல கருத்துகளைக் கூறி வருகின்றனர். ரஜினிக்கு கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், வைரமுத்து பெயரில் சில தகவல்கள் சமூக ஊடகங்களில் உலாவந்து கொண்டிருக்கின்றன என்பதால் இத்தகைய விளக்கத்தை அவர் கொடுத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
