எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை; கனிமொழி மேடம் எனக்கு உதவியாகத்தான் இருக்கிறார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.க்கும், அமைச்சர் கீதா ஜீவனுக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக செய்திகள் வந்தன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனத்திற்கே தொடர்புகொண்ட அமைச்சர், ‘எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை; கனிமொழி மேடம் எனக்கு உதவியாகத்தான் இருக்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் அமைச்ச கீதா ஜீவனுக்கும், கனிமொழிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த ‘மேல் மட்டத்தில்’ சதி நடப்பதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை உ.பி.க்களிடமும், அறிவாலயத்தில் மூத்த தலைவர்களிடமும் பேசியபோது நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். ‘‘தலைவர் கலைஞர் இருக்கும் போது, கனிமொழிக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கலைஞரின் மறைவிற்கு பிறகு கனிமொழியை தூத்துக்குடி எம்.பி.யாக்கி அழகு பார்த்தார், அண்ணன் மு.க.ஸ்டாலின். அங்கு அவரது சீரிய பணிகள் தூத்துக்குடி மாவட்ட மக்களை மிகவும் கவர்ந்தது. 

இந்த நிலையில்தான் கீதா ஜீவனுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் மோதல் என்ற செய்திகளை கசியவிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த செய்திகளை பல்வேறு பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதியே சிலரிடம் பேசியதாகவும் சொல்கிறார்கள். இதன் பிண்ணனியில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சிலர் இருப்பதாகவும், மூத்த தி.மு.க. நிர்வாகிகளே கிசுகிசுக்கின்றனர்’’ என்றார்.


நீங்கள் சொல்வது உண்மையா... எதற்காக கனிமொழிக்கு எதிராக உதயநிதி உள்குத்து அரசியலில் ஈடுபடவேண்டும் என்றோம், ‘‘சமீப நாட்களாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும், துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். ஆனால், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோருக்கு இதில் துளியளவும் விருப்பம் இல்லையாம்.

இந்த நிலையில்தான், கனிமொழிக்கு எதிரான உள்குத்து வேலையில் கீதா ஜீவனை வைத்து உதயநிதி தரப்பில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். இந்த தகவல்கள் தலைமைக்கு சென்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இது கட்சிக்கு நல்லதில்லை. இதுபோன்று இனி கட்சிக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த தரப்பை கண்டித்ததாகவும் தகவல் உண்டு’’ என்றனர். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்