நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த்  அதிரடியாக அறிவித்துள்ளார். 

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கையோடு அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுப்பது தனது கடமை என்று கூறி ஐதராபாத்திற்கு விமானம் ஏறினார் ரஜினி. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் மிக மிக கடுமையாக பின்பற்றப்பட்டன. ரஜினியை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சன் பிக்சர்ஸ் செய்து கொடுத்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி ரஜினியின் கேரவேன் ஓட்டுனர், நயன்தாராவின் மேக்கப் மேன் என நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து ரஜினி உள்ளிட்டோர் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

இதனால் மூன்று நாட்களுக்குள் இரண்டுமுறை ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் நெகடிவ் என்றே வந்தன. மறுநாளே அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் நெகடிவ் என வந்த பிறகே ரஜினி இயல்பு நிலைக்கு திரும்பினார். மூன்று நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்து ரஜினி பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்துக்கு மருத்துவர் சில அறிவுரையை வழங்கினர். அதில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும். கரோனா தொற்று ஏற்படக் கூடிய சூழல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகக் குறைந்தபட்சப் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்திற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். 

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ரஜினிக்கு அரசியலுக்கு பின்னால் ஒவ்வொரு தலைவர்களும் பாஜக இருப்பதாக கூறிவந்த நிலையில் ரஜினியின் இந்த முடிவு பாஜகவுக்கு பெரிய பாதிப்பு என்றே கூறப்படுகிறது.