documents will be submitted in election commission
சசிகலாவை பொது செயலாளராக அங்கீகரிக்க வேண்டும், என்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக அணிகள் இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பு சார்ப்பிலும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
அந்த பத்திரங்களில் இருதரப்பிலிருந்தும் அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சி பெயருக்காக பல ஆவணங்கள் அளிக்கப்பட்டன .
மேலும் எடப்பாடி பழனிசாமி அணிசார்பில் அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுசெயலாளர் தினகரன் ஆகியோர் நியமனம் செய்யவும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில்தான் கடந்த வாரம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இந்நிலையில் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க இணைந்த அணிகள் தீவிரமாக முயற்சி கெய்து வருகின்றன..

டெல்லி சென்ற தமிழக அமைச்சர்கள் 3 பேருக்கு நேரம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் பிரமாண பத்திரங்களை திரும்ப பெறுவதில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்குவது உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் அமைச்சர்கள், ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி சென்றனர்.

மேலும் இன்று அவர்கள் தேர்தல் கமிஷனரை நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் தேர்தல் கமிஷன் அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கவில்லை.
ஆனால் தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோர் டெல்லி சென்று தேர்தல் கமிஷனரை சந்தித்தனர். இவர்கள் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து உள்ளனர்.
டி.டி.வி.தினகன் அணியைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்டவர்களை அழைத்துப் பேசிய தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் அணியினரை சந்திக்கவில்லை என்பதால் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
