மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்; அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்குப் பணியிடக் கலந்தாய்வை நடைமுறைபடுத்த வேண்டும்; அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் 6 அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று காலை 7.30 முதல் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களுடன் இரண்டு முறை  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரியை, நியமனம் செய்வதாக இரவு 8 மணியளவில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில்ராஜ் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு கோரிக்கையை இரண்டு மாதங்களில் நிறைவேற்றித் தர எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.  இதையடுத்து, மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதன் மூலம், நான்கு நாட்கள் நீடித்துவந்த அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.