கொவிட்- 19 என்ற கொரொனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு , நாட்டு நலன் கருதி உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து  இச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம்:-   நாட்டின் பல்வேறு பகுதிகளி்லும், உலகின் பல நாடுகளிலும் கொவிட் -19 பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் -19 ஐ தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

 

மக்கள் நெருக்கமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என சர்வதேச பொது சுகாதாரத்துறை நிபுணர்களும், உலக நல நிறுவன நிபுணர்களும் அறிவுறுத்தி உள்ளனர். இதை கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும்  பொதுமக்களை,  பெரும் எண்ணிக்கையில்,  அச்ச உணர்வுடன் ஒன்று திரண்டு போராட வைத்துள்ள, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கொவிட் -19  தடுப்பைவிட ,பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரச்சினை ,அவசரமான அதிமுக்கியப் பிரச்சினையல்ல.

 நமது மக்களின் உடல் நலனையும், உயிரையும், பொருளாதாரத்தையும் காப்பதுதான் மிக முக்கிய தலையாயப் பிரச்சினை.கொவிட் -19 தடுப்பிற்கு, நாட்டில் அமைதியான சூழலையும், பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் அனைத்து பகுதி மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து குடிமக்களையும் கொவிட் -19 தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது.எனவே, அதை உணர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.