அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.  இது குறித்து அச்சங்கம்,  நீட் நுழைவுத் தேர்வால், அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த, அடித்தட்டு சமூக மாணவர்கள் தான் அதிக அளவில், அரசுப் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயில்கின்றனர். இப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில்  2 முதல் 6  மாணவர்கள் வரை மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானதாகும். நீட்  நுழைவுத் தேர்விலிருந்து  தமிழக அரசின் மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசு, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தவறிவிட்டது.

மத்திய அரசும் ஒப்புதலை பெற்றுக்கொடுக்காமல் தமிழகத்தை வஞ்சித்து விட்டது. நீட் தேர்வு மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது. இதனால், அரசுப்பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புகளில் பயிலும், மாணவர்களுக்கு , அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அப்பள்ளிகளில் படித்திருந்தால் அவர்களுக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பல கட்டப் போராட்டங்களையும், கருத்தரங்கங்களையும் நடத்தியுள்ளது. இந்நிலையில், இந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கிட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.இது வரவேற்புக்குரியது. 

இந்த குழு, அரசுப் பள்ளி மாணவர்கள்,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளி மாணவர்களுக்கு, 15 விழுக்காடு வரை இட ஒதுக்கீட்டை வழங்கிட பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பரிந்துரையை, வரும் கல்வியாண்டு முதலே  நடைமுறைப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை 25 விழுக்காடாக உயர்த்துவது தொடர்பாகவும் பரிசீலிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது . இந்த முயற்சியை மேற்கொண்ட , தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தற்போதைய நிலவரப்படி எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டிற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் மருத்துவ இடங்கள் 6 ஆயிரம் உள்ளன . இவற்றில் 15 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டால், 900 இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட, எந்த வித சட்ட ரீதியான சிக்கல்களும்,தடங்கல்களும் ஏற்பட்டு விடாமல்,  எச்சரிக்கை உணர்வுடன் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
என அதில் கூறப்பட்டுள்ளது.