திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கேற்க அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்மையில் கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மயிலாப்பூர், தி. நகர் தொகுதிகளில் திமுகவே போட்டியிடும்” என்றெல்லாம் பேசி திமுக கூட்டணி கட்சிகளை உதயநிதி ஸ்டாலின் சீண்டியிருந்தார். கட்சித் தலைவர் பேச வேண்டியதை, உதயநிதி ஸ்டாலின் பேச ஆரம்பித்திருப்பதை கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.  
உதயநிதியின் பேச்சால் கூட்டணி கட்சிகள் அதிப்ருதி அடைந்தபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதியின் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொகுதி பங்கீடு குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்தை பெரிதாக்க வேண்டிய தேவையில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து ஆகும். கூட்டணி என்பது பல கொள்கைகள், கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள்வதுதான். எனவே, இதையெல்லாம் பேசி தீர்ப்போம். தொகுதி பங்கீடு விஷயத்தில், மு.க. ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார்.” என்று தெரிவித்துள்ளார். 
ஏற்கெனவே புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவும் தயார் என்று அழகிரி கூறியிருந்தார். இதற்கிடையே நாளை முதல் ராகுல் மூன்று நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.