Asianet News TamilAsianet News Tamil

அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா..? நீதிபதியை தீர்ப்பை மாற்றச்சொல்லும் கி.வீரமணி..!

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு செயலுக்கு ஆக்கமும், ஆர்வமும், ஊக்கமும் அளிக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது ஆபத்தானது. நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Do you support breaking the coconut in the head of Amman temple? K Veeramani Advice to Judge
Author
Tamil nadu, First Published Jun 5, 2020, 5:13 PM IST

நேர்த்திக்கடன் என்கிற பெயரில் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா என, உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி18 மற்றும் 19 ஆவது நாட்களில் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது என்கிற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூடத்தனம் நடைபெறுகிறது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதுண்டு.Do you support breaking the coconut in the head of Amman temple? K Veeramani Advice to Judge

இந்த ஆபத்தை விளைவிக்கும் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நியாயமான வழக்கொன்றினை மகாலட்சுமி மும்முடியார் குல நல சங்கம் சார்பில் தொடுக்கப்பட்டது. தலையில் தேங்காய் உடைப்பதால் பலருக்கும் காயங்கள் ஏற்படுகின்றன, உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில், “பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழக்கம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் மட்டுமல்ல; தமிழகத்தில் பல கோயில்களில் நடைமுறையில் உள்ளது. தலையில் தேங்காய் உடைப்பதுபோல பக்தர்கள் தங்களை வருத்திக் கொள்ளும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தீ மிதித்தல் எனும் வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. இதுபோல் அலகு குத்துதல் வழிபாடும் உள்ளது.

எங்கெல்லாம் தமிழ்க் கடவுள் முருகனுக்குக் கோயில் இருக்கிறதோ, அங்கெல்லாம் அலகு குத்தும் வழிபாடு நடக்கிறது. தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டி அது நிறைவேறியபின் நேர்த் திக் கடனாக உடலை வருத்திக் கொள்ளும் இத்தகைய வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையால் வெவ்வேறு முறைகளில் வழிபாடுகளை மேற்கொள்வது பழங்காலத்திலே இருந்துள்ளது.

‘கலிங்கத்துப் பரணி’நூலில் போரில் வென்றபின் காளி தெய்வத்துக்குப் போர் வீரன் தலையை வெட்டி காணிக்கையாக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பக்தர்களின் விருப்பப்படி நிறைவேற்றிக் கொள்ளும் வழிபாடு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நடத்தி வருகின்றனர். ஒரு சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம்.

Do you support breaking the coconut in the head of Amman temple? K Veeramani Advice to Judge

கடவுள் வழிபாட்டில், பூஜைக் காரியங்களில் இந்த நீதிமன்றம் எந்தக் கொள்கையையும் பரப்பவில்லை. தலையில் தேங்காய் உடைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக பக்தர்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை. எனவே பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறையை நிறுத்தும்படி உத்தரவிடுவது தேவையற்றது; நியாயமற்றது; மத சுதந்திரத்தில் தேவையின்றி குறுக்கிடுவது போலாகி விடும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியின் இத்தீர்ப்பு அதிர்ச்சிக்குரியது. மனித உயிருக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு செயலுக்கு அரண் அமைப்பதாக உள்ளது.

கலிங்கத்துப் பரணியில் கூறப்பட்டுள்ளதை இன்று செய்யலாமா? நீதிமன்றம் அனுமதிக்கிறதா? நீண்ட காலமாக ஒன்று நடைபெற்று வருவது என்பதாலேயே அது ஏற்றுக் கொள்ளப்பட முடியுமா? நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி கலிங்கத்துப் பரணியில் போரில் வென்ற போர் வீரன் தலையை வெட்டி காணிக்கை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாரே அந்த வழக்கத்தை இன்றைக்கு மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா? மெத்த படித்த நீதிபதிகள் அமர்ந்துள்ள உயர் நீதிமன்றம் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுமே!

இதே மதுரைக்கு அருகில் பேரையூரில் குழிமாற்றுத் திருவிழா என்ற கோயில் திருவிழா நடைபெறவில்லையா? குழந்தையைக் குழிக்குள் போட்டு மூடி, கொஞ்ச நேரம் கழித்து, வெளியே எடுப்பது என்ற கொடூர நேர்த்திக் கடன் வழக்கில் இருந்ததுதான். அதற்காக அதனை தடை செய்யவில்லையா? புதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் காலங்காலமாக நடந்து வந்த எருமைக்கிடா வெட்டு நிகழ்ச்சியை அரசு சட்டம் போட்டுத் தடுக்கவில்லையா?

இதில் மிகவும் முக்கியமான கருத்து, நரம்பியல் மருத்துவர்கள் தலையில் தேங்காய் உடைப்பது குறித்து என்ன கூறுகிறார்கள்? சென்னை – பிரபல நரம்பியல் டாக்டர் என் திலோத்தமை கூறுகிறார்:

“தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். தலையில் உள்ள எலும்புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான்; ஒரு குழந்தையைக் குலுக்கினாலேகூட மூளை ஆடலாம்.

மூன்று வகையான பாதிப்புகள் ஏற்படலாம். அதிர்ச்சி, கன்னிப் போதல், மூன்றாவது நரம்புகள் சிதறிப் போவது. உள்ளே இருக்கும் ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம், இது உடனேயும் ஏற்படலாம். தாமதமாகவும் ஏற்படலாம். மூளையின் உள்ளேயும் ஏற்படலாம், வெளியேயும் ஏற்படலாம். காலந்தாழ்ந்த நிலையில் கை, கால் செயல்படாமல் போகலாம். இதற்கு சப்டியூரல் ஹெமட்டோமா என்று பெயர்”

இவ்வளவையும் கூறுவது ஒரு நரம்பியல் மருத்துவர் என்பது கவனமிருக்கட்டும். இவ்வளவுப் பெரிய ஆபத்துகளுக்கு இடமளிக்கக்கூடிய ஒன்றை, உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தப்படும் ஒன்றை பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், பழக்கவழக்கங்கள் என்ற பெயரால், நீண்ட காலமாக நடந்து வருகிறது என்ற பெயரால், நேர்த்திக் கடன் என்ற பெயரால் அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் அனுமதிப்பது அங்கீகரிப்பது எவ்வளவுப் பெரிய விபரீதம்!Do you support breaking the coconut in the head of Amman temple? K Veeramani Advice to Judge

பிரபல நரம்பியல் மருத்துவர் சொல்லும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் கற்றறிந்த நீதிபதிக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! இவ்வளவு இருந்தும் மத நம்பிக்கையில், வழக்கத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறுவது சரியானதாகுமா? இந்திய அரசமைப்புச் சட்டம் 51A–hஎன்ன கூறுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்படவில்லையா?

நீதிபதி அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டை உதறித் தள்ளி நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது என்பதற்காக மூடநம்பிக்கைகளுக்கு அதுவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு செயலுக்கு ஆக்கமும், ஆர்வமும், ஊக்கமும் அளிக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது ஆபத்தானது. நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios