Do you know the salaries of the Chief Secretary?

தலைமைச் செயலக பணியாளர்கள் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட ஊதியத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தியாகராஜனின் திடீர் மரணம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுதான் இந்த மரணத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பத்திரிகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 7 வது ஊதியக்குழு
பரிந்துரைகள்படி ஊதிய உயர்வு பற்றிய பட்டியலை அறிவித்திருந்தார். இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெளியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியலில், இடம்பெற்றுள்ளது சராசரி ஊதியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சராசரி ஊதியத்தை ஒரு பணியாளர் அடைய, ஒரே பதவியில் 20 முதல் 25 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். தலைமைச் செயலக பணியாளர்கள் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் வெளியிட்ட ஊதியத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. அவர் வெளியிட்ட உண்மைக்கு மாறான தகவல் குறித்து விளக்கம் அளிக்கிறோம்.

குறிப்பாக உதவியாளர் நிலையில், அமைச்சர் ரூ.41,873 பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தலைமைச் செயலக பணியாளர்கள் அடிப்படை ஊதியமாக ரூ.21,400 மட்டுமே பெறுகின்றனர். உதவி பிரிவு அலுவலர் நிலையில் அமைச்சர் குறிப்பிட்டது ரூ.83,085; உண்மையில் ரூ.38,948 அடிப்படை ஊதியமாக பெறுகின்றனர். இது போல் பிரிவு அலுவலர், சார்பு செயலர், துணை செயலர் உள்ளிட்ட பல்வேறு நிலையிலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.