Do you know Rajini spiritual politics? Seeman explanation
தமிழகத்தில் எது நடந்தாலும் கவலைப்படாமல் இமயமலையில் போய் இருப்பதுதான் ஆன்மீக அரசியல்; இதுதான் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதியை, இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அய்யா வைகுண்டர் தலைமை பதியை கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. அய்யாவழி, இந்து மதல் அல்ல. தனி வழி என அறிவிக்ககோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டம் சாமித்தோப்பு பதி தலைமை நிர்வாகி பாலபிரஜாபதி தலைமையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. சீமான் ஆஸ்டின், சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சிப்பது அர்த்தமற்றது. நாடெங்கும் கிராமங்கள் தோறும் குலதெய்வங்கள் உள்ளன... அவற்றை எடுப்பார்களா? என்றார். எந்த கோயிலுக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்ட காலத்தில், அந்த கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தனி வழிபாட்டை ஏற்படுத்தி எதிர்புரட்சி ஏற்படுத்தியவர் அய்யா. அரசு எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்தை சாகடித்து விடுவார்கள். அய்யா வழி பதியை எடுக்கலாம் என நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்று கூறினார்.
இதன் பிறகு சீமான், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ரஜினி பகுதிநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறி விட்டு இமயமலைக்கு போயிருக்கிறாரே என நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். ரஜினிதானே தமிழகத்தை காக்க வந்த பரமாத்மா என கூறுகிறீர்கள். ஆனால் அவரிடம் இந்த கேள்வியை கேட்காமல் என்னிடமே வந்து கேட்கிறீங்க? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் எது நடந்தாலும் கவலைப்படாமல் இமயமலையில் போய் இருப்பதுதான் ஆன்மீக அரசியல். தீவிபத்து ஏற்பட்டாலும், குண்டு வெடித்தாலும் என்ன
நடந்தாலும் ஆன்மீகவாதிகள் சாந்தி, சாந்தி என சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதுதான் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்று சீமான் கூறினார்.
