வன்னிய சமூதாய மக்களை வன்முறை சமூகமாகக் காட்ட முயற்சிக்காதீர்கள் ஊடக நண்பர்கள். நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். எங்களின் நோக்கம் அறவழி போராட்டம்தான் என இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பாமகவினர் சென்னையில் இன்று முதல் 5 நாட்கள் வரை போட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை நோக்கி வந்தவர்களை பெருங்களத்தூரிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பா.ம.க,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயிலை மறித்து, கற்களை வீசி தாக்கினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில்,  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி;- கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்துள்ளோம்.  அதனைக் கேட்டுக் கொண்ட அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக 40 ஆண்டுகளாக போராடியும் நியாயம் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் போதே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பங்கு வன்னியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள், குடிசையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், சாலை போடுபவர்களாக, வீடு கட்டும் கொத்தனாராக, கல் உடைப்பவர்களாக இருக்கிறார்கள். மேலும், எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம் கிடையாது. சமூக நீதிக்கான போராட்டம். இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்னை அல்ல. உரிமை பிரச்னை. நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த கோரிக்கை என தெரிவித்துள்ளார்.