மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் நேரத்தில் 2500 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல் என தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் அவரின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற வியூகங்களிலும் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று மற்றும் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வரும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின்  இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, அதாவது, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், 2500 என்று அதிமுக அரசின் இந்த அறிவிப்பு தேர்தலுக்கான பணப்பட்டுவாடா எனவும், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான திட்டமிட்ட சதி எனவும் அதிமுகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தொற்று மற்றும் புயல் வெள்ளம் என இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நிதி கொடுப்பது தவறா? ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதை தடுப்பவர்கள் வெற்றி பெற்றதாக  சரித்திரம் இல்லை எனவும் கூறியுள்ளார். அதிமுகவை எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழக பாஜகவும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை விமர்சித்துள்ளது. 

வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்குவகையில் தமிழக பாஜகவின் தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்கி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக துணைத்தலைவர்  அண்ணாமலை கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர்,  மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல் என கடுமையாக சாடினார், ஆனால் மோடி அரசியல் என்பது வேறு கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை மோடி அரசியல் உயர்த்தியிருக்கிறது. பெண்களை தலைநிமிர வைத்து, விவசாயிகளுக்கு 6000  ரூபாயை வழங்கி அவர்களை நேராக நடக்க வைத்தது மோடி அரசியல். அரசு 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்பதற்காக ஐந்து வருடங்களுக்கு உங்களது வாழ்க்கையை அடமானம் வைத்து  விடாதீர்கள் என அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார். 

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில், இதில் 2,000 ரூபாயை கொடுப்பதற்காக வாழ்க்கையை அடமானம் வைத்து விடாதீர்கள் என  அதிமுகவை அண்ணாமலை நேரடியாக விமர்சித்துள்ளது இது அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.