மருத்துவ படிப்பில் சேர முடியாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் இழப்பு நம் எல்லோருக்கும் மிகப்பெரிய நஷ்டம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த அனிதா, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அனிதாவின் உயிரிழப்பு நம் எல்லோருக்கும் மிகப்பெரிய நஷ்டம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஏழை குடும்பத்தில் இருந்து வந்து, அவ்வளவு திறமையோடு படித்தும் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அதைவிட ஒரு பெரிய இழப்பு இருக்கவே முடியாது. நீட் விலக்கு கோரும் மாநில அரசின் அவசர சட்டத்துக்கு என்னால் முடிந்த அத்தனை உதவியையும் செய்தேன் என்று கூறியுள்ளார். 

மாணவி இறந்தது குறித்து நாம் எல்லோரும் ஒன்றாக கூடி பேசலாம். ஆனால், வீணாக பழிபோடும் அரசியலை இங்கே செய்ய வேண்டாம் என்றும் நீட் தேர்வு விலக்குக்கான ஒவ்வொரு கட்டத்திலும் மாநில அரசுக்கு முழு ஆதரவு கொடுத்தோம் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.