முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மரியாதை செலுத்தவும் ரஜினி செல்லவில்லை. இதே போல் இறுதிச்சடங்கிலும் ரஜினி பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

நடிகர் ரஜினி நட்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். நாடு முழுவதும் ரஜினிக்கு ஏராளமான பிரபலங்கள் நண்பர்களாக உள்ளனர். அந்த வகையில் தற்போதைய பிரதமர் மோடி மட்டும் அல்ல முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் ரஜினிக்கு நண்பர். வாஜ்பாயின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவாக ரஜினி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருவார். வாஜ்பாயின் கனவை நனவாக்க நதிகளை இணைக்க வேண்டும் என்பது ரஜினியின் நிலைப்பாடு.   

மேலும் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ரஜினி பிரதமராக இருந்த வாஜ்பாயை நேரில் சந்தித்துள்ளார். மேலும் நதிகள் இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டால் தான் ஒரு கோடி ரூபாய் வழங்க தயார் என்றும் ரஜினி கடந்த 2003ம் ஆண்டே அறிவித்தார். இந்த அளவிற்கு வாஜ்பாய் மீதும் அவரது நதிகள் இணைப்பு திட்டம் மீதும் ரஜினி அதிக நாட்டம் கொண்டவர். 

மேலும் வாஜ்பாய் மறைந்த உடனே ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டார். தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பதற்கு முன்னரே ரஜினி இரங்கல் தெரிவித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். ஆனால் ரஜினி டெல்லி சென்று வாஜ்பாய் உடலுக்கு மரியாதை செலுத்தவில்லை. மேலும் டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் உடல் தகன நிகழ்ச்சியிலும் ரஜினி பங்கேற்கவில்லை.   

வாஜ்பாயின் நண்பராக இருந்த ரஜினி ஏன் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, ரஜினி மிக விரைவில் தீவிர அரசியலில் இறங்க உள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ரஜினி பா.ஜ.கவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. தான் பா.ஜ.கவிற்கும் சரி அவர்களின் தலைவர்களுக்கும் சரி நெருக்கமானவன் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு இருந்தது.  

எனவே வாஜ்பாய்இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் தான் பா.ஜ.கவிற்கு நெருக்கமான நபர் இல்லை என்பதை தமிழத்திற்கு ரஜினி சொல்லாமல் சொல்லியுள்ளார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர்.