கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தி.மு.க.வை மிக மிக கடுமையாய் விமர்சித்து வந்த ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் அக்கட்சியுடன் நட்பு பாராட்ட துவங்கியுள்ளார். ‘ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டே ஓய்வேன்’ என்று வழக்கம்போல் உணர்ச்சி பீறிட பிரகடனம் செய்துள்ளார். ஸ்டாலினும் வைகோவுக்கு பிரத்யேக மரியாதையை கொடுக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்டாலினுடன் வைகோ காட்டும் நெருக்கமும், வைகோவுக்கு ஸ்டாலின் கொடுக்கும் இடமும் தி.மு.க.வில் சில சீனியர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வைகோ அறிவாலயம் வந்தார்.

அப்போது வழக்கமாக ஸ்டாலினின் கார் நிறுத்தப்படும் இடத்தில் வைகோவின் கார் நிறுத்தப்பட்டது. கடுப்பான சீனியர்கள் ‘தளபதியின் கார் நிற்குமிடத்தில் வேறொரு கார் எப்படி?’ என்று அறிவாலய பணியாளர்களை கடிந்து பேச, அவர்களோ ‘தளபதியின் உத்தரவு இது.’ என்றார்கள்.

அப்போதைக்கு தி.மு.க. சீனியர்கள் மெளனமாகிவிட்டாலும் கூட மனதிற்குள் இதை அசைபோட்டுக் கொண்டே இருந்தனர் ஆத்திரம் கலந்த ஆதங்கத்துடன். வைகோவின் வரவால் ஸ்டாலினின் இடத்தில் தங்களுக்கு இருக்கும் நெருக்கமும், வாய்ப்பும் பறிபோவதாக அந்த சீனியர்கள் கருத துவங்கியுள்ளனர்.

தி.மு.க. சீனியர்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த கடுப்பை நமது ஏஸியாநெட் இணைய தளம் அப்போதே சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டம் விஜயமங்களத்தில் தி.மு.க.வின் மண்டல மாநாடு நடந்தது. இதில் இரண்டாவது நாளில் சிறப்புரை ஆற்ற வந்தார் துரைமுருகன்.

ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு, பதவிக்கு வர முயலாமல் ஸ்டாலின் பொறுமை காப்பதன் காரணமே கருணாநிதி ‘என் மகன்  மக்கள் அபிமானத்தை வென்று ராஜபாட்டையில்தான் கோட்டையில் அமர வேண்டுமே தவிர. பின் வாசல் வழியே வரக்கூடாது.’ என்று சொல்லியிருப்பதால்தான் என்றெல்லாம் விளக்கினார்.

பின் ஒரு கட்டத்தில் “இந்த மாநாட்டை பார்க்க பல வகைகளில் எனக்கு சந்தோஷம். அதிலும் குறிப்பாக இந்த மாநாடு நமது கழகத்தை சேர்ந்தவர்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும்! என்று நாங்கள் தளபதியிடம் கேட்டிருந்தோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டிவிட்டார். வேறு யாரும் இந்த மேடையில் இல்லை.

அவர்களெல்லாம் வந்து பேச ஆரம்பித்தால் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமோ, என்னவோ.! அந்த வகையில் நிம்மதியே.” என்று மறைமுகமாய் பேச, புரிந்து கொண்ட தி.மு.க.வினர் ஆர்ப்பரித்தனர். துரைமுருகன் குத்திப் பேசியது வைகோவைதான்! என்று மாநாட்டு பந்தல் முழுக்க பரபரப்பானது.

ஈரோடு மண்டல மாநாட்டில் வைகோவுக்கு இப்படியொரு அவமரியாதை நிகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை எலும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்து கொண்டிருந்த ம.தி.மு.க. மாணவர் அணி மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள் கூட்டத்தில்...

“திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு நாலாத் திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துகளை உணர்ந்து, தொலைநோக்கு பார்வையுடன் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திய கழகத்திற்கும், பொதுச்செயலாலர் வைகோவுக்கும் ம.தி.மு.க. மாணவரணி நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.” என்று கூத்தாடிக் கொண்டிருந்தது.

என்ன கொடும வைகோ சார் இது? இம்புட்டு வெள்ளந்தியாவா இருப்பீங்க?