Do not give importance to a day of lack of importance
முக்கியத்துவம் இல்லாத தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும் சசிகலாவுக்கு ஆதரவாக தம்பிதுரை, ஓ.எஸ்.மணியன் பேசி வருவது அவர்களது தனிப்பட்ட கருத்து எனவும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்து பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்திருந்தார்.
இரட்டை இலை விவகாரத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் முனுசாமி, முக்கியத்துவம் இல்லாத தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும், சசிகலாவுக்கு ஆதரவாக தம்பிதுரை, ஓ.எஸ்.மணியன் பேசி வருவது அவர்களது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததை வரவேற்கிறோம் என்றும் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
