என்னைப் பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 3-ம் நபருக்கு வழங்கக் கூடாது என்று சசிகலா கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வகையில் சசிகலா கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்கு சென்றார். ஏற்கனவே அவர் 21 நாட்கள் சிறையில் இருந்திருந்தார். இதனால் 2021ம் ஆண்டு ஜனவரி இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சசிகலா இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆவார் என்று தகவல்களை வெளியிட்டு வந்தார்.

இதற்கிடையே சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் சிறை நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனால் சசிகலா விரைவில் விடுதலை ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சசிகலா வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் செப்டம்பர் மாத இறுதியில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கோரிக்கை வைத்துள்ளர். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு வழங்கக்கூடாது. தான் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பு இல்லாத 3வது நபருக்கு விளம்பரம் மற்றம் அரசியல் நோக்கில் விவரங்கள் கேட்பதால் விவரங்களை அளிக்கக்கூடாது என குறிப்பட்டுள்ளார்.