அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை என்று ஜெயலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். திமுக ஓராண்டில் அதிகமாக குழு அமைத்தது மட்டுமே அதன் சாதனை எனக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை என்று ஜெயலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். திமுக ஓராண்டில் அதிகமாக குழு அமைத்தது மட்டுமே அதன் சாதனை எனக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக அளவில் இருக்கும்போது எதற்காக தனித் தனியாக குழு அமைக்க வேண்டும் வேண்டும் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தியாகராய நகரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

சிறையில் இருந்து வெளியில் வந்த கையோடு கட்சியை கைப்பற்றுவார் என்று எதிர் பார்த்த நிலையில் இதுவரை அவர் நிதானமாகவே இருந்து வருகிறார். ஆனால் அவரை கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்கான ஆன்மிகம் மற்றும் அரசியல் பயணத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். இதில் சென்னை தி நகரில் அண்ணா தொழிற்சங்க தென்சென்னை மாவட்ட தலைவர் குணசேகரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.

அரசு நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதை சுட்டிக்காட்ட வேண்டியவர்கள் பத்திரிக்கையாளர்கள், அது அவர்களின் பணி, அதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டுவது வழக்குப் போடுவது தவறான நடவடிக்கை, திமுக அரசு திருத்திக்கொள்ள வேண்டும் என்றார். அதிமுக தலைவர்கள் தொண்டர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும், அந்த நிலைமை தற்போது இல்லை, அதிமுகவில் தொண்டர்களின் ஒருவருக்கு தான் ஜெயலலிதா ராஜ்யசபா சீட் கொடுத்து வந்தார், அதுபோன்ற நடவடிக்கை இப்போதும் தொடர வேண்டும் என்றார். அதிமுக நிர்வாகிகள் பலர் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்பது குறித்து இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்க்க வில்லை, ஒரு சிலர் மட்டுமே எதிர்த்துப் பேசுகிறார்கள் அது பதிவிக்காக இருக்கலாம் என்றார். ஆனால் விரைவில் என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை தனக்கு உள்ளது என்றார்.

கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் எந்த சாதனையும் நடைபெறவில்லை, குழுக்களுக்கு மேல் குழுக்கள் அமைத்தது தான் சாதனை, 321 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கும்போது தனியாக குழு அமைக்க வேண்டிய தேவை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முடக்குவது தான் திமுகவின் ஓராண்டு பணி, ஏழை எளிய மக்களுக்கு அம்மா மருந்தகம் பயன்பட்டது ஆனால் அது நடத்தவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது இது சரியல்ல, இது போன்ற திட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றார். மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டு பெற வேண்டும், சண்டை போடக்கூடாது என்ற அவர், பேரறிவாளன் விடுதலைக்கு விதை போட்டது ஜெயலலிதாதான் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி ஒருவரே பேரறிவாளன் குற்றவாளி இல்லை என கூறி இருக்கிறார் என்றார்.