கடந்த சில வாரங்க வைகோ மற்றும் சீமான் இருவருக்குமிடையில் ’பிரபாகரனின் உண்மையான தோழன் யார்?’ என்பதை மையமாக வைத்து மிக மோசமான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. வைகோவை சீமான் ‘கொசு’ என்றும், பதிலுக்கு அவரோ ‘உன் பண மோசடிகளையும், பெண் தொடர்பு உண்மைகளையும் அவிழ்த்து விடவா?’ என்று கேட்படுதுமாக சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது அரசியல்.

இப்படி தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் இருவருமே ஒரே புள்ளியில் மட்டும் ஒன்றிணைகிறார்கள். அது தனி ஈழம் வேண்டும்! என்பதே. ஆனால் அதற்கும் அழுத்தமாக வேட்டு வைத்திருக்கிறார் இலங்கையில் தமிழர்கள் நிறைந்த பகுதியான வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான விக்னேஸ்வரன்.

தனி ஈழம், தனி நாடு என்று இங்கே வீதிக்கு வீதி முழங்கும் வைகோ, சீமான் உள்ளிட்ட இன்ன பிற ‘ஈழத்தமிழர் போராளிகளை’(!?) நோக்கி அழுத்தமான ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் அவர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் வந்த அவர், “தமிழக அரசியல் தலைவர்களில் சிலர் தனி ஈழம்! என்று பேசுவதன் மூலமாக அங்கே நாங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தலுக்கு ஆளாகிறோம். சதா சர்வ காலமும் இவர்கள் தனி நாடு பற்றி பேசுவதால் வடக்கு மாகாண மக்களும், தென் இலங்கை மக்களும் கலவரம் கொள்கிறார்கள்.

ஏதோ தென் இந்திய தமிழர்கள் இந்தியாவிலிருந்தே பிரிந்து, வட இலங்கையுடன் இணைந்து ஒரு புதிய நாட்டை தமிழர்களுக்காக உருவாக்கிட எத்தனிக்கிறார்களோ!? என்கிற பயம்தான் அந்த கலவர உணர்வுக்கு காரணம். ஒரு உண்மை தெரியுமா? தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவளிப்பதென்பது எங்கள் நாட்டு சட்டத்தின் படி குற்றமாகும். எனவே அந்த பேச்சை நிறுத்துங்கள்.

எங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்...இங்குள்ள தமிழ்த் தலைவர்கள் பொருளாதார விருத்திகளை எங்கள் பகுதிக்கு கொண்டு வரலாம். புலம் பெயர்ந்த அகதிகளின் பிள்ளைகள் கல்வி வளர்ச்சிக்கு ஆவண செய்யலாம். அதவிடுத்து தனி ஈழம் பேசினீர்களேயென்றால் எங்களுக்கு இங்கே நஷ்டம் அதிகரிக்கத்தான் செய்யும்.” என்று  வெளிப்படையாக தாக்கியிருக்கிறார்.

தமிழகம் வந்த போது மட்டுமில்லை இலங்கையில் இருக்கும்போதே நடக்கும் அரசியல் ஆலோசனைகளில் தமிழக தலைவர்கள் அதிலும் குறிப்பாக சீமான், வைகோ போன்றோர்களின் ‘தனி ஈழம்’ கோஷத்தினால் தங்கள் மண்ணில் விரும்பத்தகாத சூழல்கள் ஏற்படுவதாகவும், மக்கள் மீண்டும் போர் வந்துவிடுமோ?! என்று பயம் கொள்வதாகவும், இந்த இரண்டு பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இங்கிருக்கும் இக்கட்டான நிலை புரியவில்லையா அல்லது புரிந்தும் கூட அரசியலுக்காக இப்படி பேசுகிறார்களா?! என்று விக்னேஸ்வரன் பல முறை விசனப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் வடக்குமாகண தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள்.
என்ன சொல்ல போறீங்க வைகோ, சீமான்?