ராகு காலத்தில் துவங்கினாலும் கூட செம்ம செண்டிமெண்டாக நாதஸ்வரம், தவிலிசையோடு துவங்குகிறது தி.மு.க. மாநாடு!

துவண்டு கிடக்கும் கட்சியை தூக்கி நிறுத்திட கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியான ஈரோட்டில், விஜயமங்கலம் அருகில் சரளை எனுமிடத்தில் மிக பிரம்மாண்டமாக  நடக்க இருக்கிறது தி.மு.க.வின் மண்டல மாநாடு. கோவை, நீலகிரி, ஈரோடு என மொத்தம் ஏழு மாவட்டங்கள் சேர்ந்து நடத்தும் இந்த மாநாட்டின் மொத்த பட்ஜெ இருபது கோடி ரூபாய் என்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் அமைச்சராக கோலோச்சிவிட்டு, சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வில் ஐக்கியமான சு.முத்துசாமிதான் இந்த மாநாட்டை முன்னெடுத்து நடத்துகிறார்.
ஆட்சியில் இருக்கும் போது கொங்கு  மண்டலத்தில் செம்மொழி மாநாட்டை நடத்திய பின், தி.மு.க. அதே மண்டலத்தில் நடத்த இருக்கும் இந்த மாநாட்டை ஸ்டாலின் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்.

இந்நிலையில் இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் கசிந்துள்ளது. அதன்படி வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடக்கும் இம்மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமையன்று காலை 9 மணிக்குன் நாதஸ்வரம் , தவிலிசையுடன் மங்களகரமாக துவங்குகிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற அரித்துவாரமங்கலம் டாக்டர் ஏ.கே. பழனிவேல் குழுவினர்தான் இதை நிகழ்த்துகிறார்கள்.

இன்னிசை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கும் நேரம் ராகு காலம் ஆகும். சம்பிரதாயங்களுக்கு எதிரான பகுத்தறிவு சிந்தனையுடையதுதான் தி.மு.க. அதை இதில் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் மங்களகரமான இசையுடன் ஆரம்பிப்பதே தனி செண்டிமெண்டுதானே!?

இதை சொன்னால், நாதஸ்வரம், தவிலிசை என்பது தமிழர் பண்பாடு! என்பார்கள், நமக்கேன் வீண் வம்பு.