Asianet News Tamil

7 பேர் விடுதலையில் திமுகவின் துரோகம்..? புட்டுப்புட்டு வைத்த எடப்பாடி..!

7 பேர் விடுதலையில் அதிமுக அரசு அக்கறை இல்லாமல் இருப்பதுபோன்ற குற்றச்சாட்டுகளை, மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி வந்தார். 

DMKs betrayal in the release of 7 people ..? Edappadi who told the truth
Author
Tamil Nadu, First Published Feb 13, 2021, 11:27 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திமுக செய்த துரோகங்கள் தொடர்ந்து அம்பலப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில் அக்கட்சி போடும் நாடகங்களை முதல்வர் எடப்பாடி தனது பிரச்சாரத்தில் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் குட்டு வெளிப்பட்டுவிட்டதில் திமுகவினர் தவியாய் தவித்து வருகின்றனர்.

7 பேர் விடுதலையில் அதிமுக அரசு அக்கறை இல்லாமல் இருப்பதுபோன்ற குற்றச்சாட்டுகளை, மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி வந்தார். ஆனால், இந்த பிரச்சனையில் திமுக, முன்னர் ஆட்சியில் இருந்தபோது எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி.

’’7 பேர் விடுதலை விவகாரத்தில் தலைவர் முதல் தொண்டர் வரை திமுகவில் தவறாக சித்தரிக்கிறார்கள். உண்மை செய்தி நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்’’என கூறுகிறார் எடப்பாடி. தொடர்ந்து அவரே, ’’முந்தைய திமுக ஆட்சியின் போது கருணை மனு மீது அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்போது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றலாம் என தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அதிமுக அரசு, 2018 ஆம் ஆண்டு நீதிமன்ற தண்டனையை ரத்து செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழர்களுக்காக வாழ்வதாகச் சொல்லும் திமுக, இதர மூன்று நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அமைச்சரவையில் அன்றே ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுதான் வரலாற்று உண்மை’’ என தெளிவுபடுத்தி உள்ளார். 

திமுக மீதான எடப்பாடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என ஆமோதிக்கிறார்கள் எழுவர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஆர்வலர்கள்.
இந்த விவகாரத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் என்னதான் நடந்தது என கேட்டபோது,’’7பேரில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம், மற்றவர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கில் போடலாம் என அன்று தூபமிட்டவர்தான் கருணாநிதி. அதுமட்டுமல்லாமல் கருணை மனு மீதான தீர்ப்பு காலதாமதம் ஆனதால், அதனை காரணமாக வைத்து உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதனால் நளினி, முருகன் உட்பட 7 பேரும் சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான வாய்ப்பும் உருவானது.

ஆனால் அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து கருணாநிதி வெளியிட்ட அபத்தமான  அறிக்கைதான் 7 பேரின் விடுதலைக்கு இரண்டாவது முறையாக முட்டுக்கட்டை போட்டது. அதேநேரம், மறைந்த ஜெயலலிதா இப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான மறுநாளே அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றினார். அப்போதும் திமுக, காங்கிரசை ஏவி விட்டு உச்ச நீதிமன்றத்தில் 7 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை வாங்குவதற்கு திரைமறைவு சக்தியாக செயல்பட்டது.

ஆனால் 7 பேர் விடுதலையில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டது அதிமுக அரசுதான். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என தீர்ப்பளிக்கவே, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என சொல்லி டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டார் ஆளுநர். இப்படி 7 பேர் விடுதலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் முட்டுக்கட்டை போட்டுவரும் திமுகதான் ஊரையும் உலகையும் ஏமாற்றி வருகிறது’’ என்கிறார்கள் ஆவேசமாக.
 

Follow Us:
Download App:
  • android
  • ios