மீண்டும் மோடி என எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும் வேண்டாம் மோடி என்ற முழக்கமே நாட்டில் எதிரொலித்துகிறது -ஸ்டாலின்

2019 நாடாளுமன்றத் தேர்தல் - 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இடைத்தேர்தல்கள் - 2021 சட்டமன்றத் தேர்தல் - 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் என ஐந்தாவது முறையாகத் தொடர்கிறது வெற்றிக் கூட்டணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

DMK winning alliance will continue for the 5th time,said M k Stalin KAK

இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தலைமையில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பாஜக அரசானது, நாட்டையே பல்லாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டு போய்விட்டது. இதனை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கை நடைபெற்றது.

DMK winning alliance will continue for the 5th time,said M k Stalin KAK

பா.ஜ.க ஆட்சியானது வேட்டையாடியது

பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அமையப் போகும் அரசானது மக்களாட்சி - சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - மாநில உரிமைகள் - விளிம்புநிலை மக்களின் மேம்பாடு  ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது. அகில இந்தியக் கட்சிகள், மாநிலங்களை ஆளும் கட்சிகள், மாநிலங்களை ஆண்ட கட்சிகளை உள்ளடக்கிய மாபெரும் அணியைத் தொடங்கினோம்.  தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையுடன் இருந்த பா.ஜ.க தலைமையானது, அதன் பிறகுதான் களத்தின் உண்மை நிலவரத்தை உணர்ந்தது. 'இந்தியா' என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது. 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளைத் தன்னுடைய அதிகார அமைப்புகளின் மூலமாக பா.ஜ.க ஆட்சியானது வேட்டையாடியது. இந்த கூட்டணியின் வலிமையை நாட்டுக்கு உணர்த்தியதே இதுபோன்ற பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைகள்தான். 

பத்தாண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. 'மீண்டும் மோடி' என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் இன்று எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

DMK winning alliance will continue for the 5th time,said M k Stalin KAK

திமுக கூட்டணியில் கமல்

சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டும் விட்டன. சில மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் அவையும் நல்லபடியாக நடைபெறும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச் சிறப்பாக முடிவுற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  இந்தத் தேர்தலில் அருமை நண்பர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. அவரையும் வரவேற்றுள்ளோம். இந்த அணிக்காகத் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் செய்ய இருப்பதாக நண்பர் கமல் அவர்கள் அறிவித்துள்ளார்கள். 2025 மாநிலங்களவையில் அவரது கட்சியின் குரல் ஒலிக்க இருக்கிறது.

நாங்கள் கொடுத்தோம், அவர்கள் பெற்றார்கள் என்பதாக இல்லாமல், 'அனைவரும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசித் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம்' என்பதுதான் உண்மையாகும். அனைத்துத் தலைவர்களும், ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் இதனை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள். எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.  பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள். இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

DMK winning alliance will continue for the 5th time,said M k Stalin KAK

இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது

2019 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத்தான் வென்று காட்டினோம். ஒன்றுபட்ட இலக்கும், ஒற்றுமைச் சிந்தனையும் கொண்டவர்களாக நம் கூட்டணி இயக்கத் தலைவர்களும், முன்னணியினரும், தொண்டர்களும் இருப்பதால்தான் இத்தகைய தொடர் வெற்றியை நாம் பெற்றோம்.  தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நாம் நிரூபித்து வருகிறோம். இதனைத்தான் 'இந்தியா' கூட்டணியின் தொடக்கக் கூட்டத்தில் நான் வலியுறுத்திச் சொன்னேன். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும், 

அந்தக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் மற்ற வேறுபாடுகளை மறந்து ஒன்று சேரவும் வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதுதான் இன்று மாபெரும் கூட்டணியாக மலர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான இக்கூட்டணியின் வெற்றிக்கு கழக உடன்பிறப்புகள் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

DMK winning alliance will continue for the 5th time,said M k Stalin KAK

நாற்பதும் நமதே! நாடும் நமதே

நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும். பத்தாண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள்.  நாற்பதும் நமதே! நாடும் நமதே என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நேர்காணலை தொடங்கிய திமுக- அதிமுக.! கேட்கப்படும் கேள்விகள் என்ன.? போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios