மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி அமைத்து செய்த சதிகளை முறியடித்துதான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றது. அதேபோல வேலூரிலும் வெற்றிவாகை சூடுவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல்  பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இன்று ஒரே நாளில் வேலூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். மு.க. ஸ்டாலின் காலையில் நடைப் பயிற்சியிலிருந்தே பிரசாரத்தைத் தொடங்கினார். தொகுதியின் பல்வேறு இடங்களில் மு.க. ஸ்டாலின் பேசினார்.
“வேலூரில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், திமுக வெற்றி பெறுவதைத் தடுக்கவும் திமுகவின் மீது கெட்டப் பெயரை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையத்துடன் மத்திய- மாநில அரசுகள் திட்டமிட்டு சதி செய்து தேர்தலைத் தள்ளி வைத்தன. அந்தச் சதி திட்டங்களையெல்லாம் தவிடு பொடியாக்கிதான் திமுக கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றியது. திமுக வேட்பாளர்கள் ஐந்தரை லட்சம் வரை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்கள்.

 
மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி அமைத்து செய்த சதிகளை முறியடித்துதான் திமுக வெற்றி பெற்றது. அதேபோல வேலூரிலும் வெற்றிவாகை சூடுவோம். நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க பெற்றுள்ளது. எல்லா சதிகளையும் முறியடித்து 38 உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்தது போல், கதிர் ஆனந்த்தையும் வெற்றிபெறச் செய்யவேண்டும்.
நாங்கள் ஏதோ மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றதாக அதிமுகவினர் கூறுகிறீர்கள். நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன். திமுக எம்.பி.க்களால் என்ன பிரயோஜனம் என்று கேட்டார்கள். மும்மொழிக் கொள்கைக்கு ஆபத்து வந்தபோது, உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுகதான்.” என்று மு.க. ஸ்டாலின்  தெரிவித்தார்.