வேலூர் நாடாளுமன்றத் தேர்தலைப் போல நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளில் திமுகவே வெற்றி பெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். “தமிழக தொழில் வளர்ச்சிக்காக இதுவரை எத்தனையோ  ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது  உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான  ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனாலும்,  தமிழகம் தொழில்துறையில் வளரவில்லை. பின்தங்கியே உள்ளது என்பதுதான் உண்மை. தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ளார். தமிழக  வளர்ச்சிக்காக முதலீடுகள் மூலம் தொழில்கள் வந்தால் அதை வரவேற்போம்.  
நாங்குநேரி, விக்ரவாண்டி  இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றி  பெற வைப்பது அதில் அங்கும் வகிக்கும் விடுதலை சிறுத்தைகளின் கடமை. தமிழகத்தில்  திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும்  நம்பியே  நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களித்தார்கள். அதன் பிறகு வேலூர் தேர்தல் முடிவும் திமுக ஆதரவுக்கு ஒரு சாட்சி. அதுபோலவே நாங்குநேரி,  விக்ரவாண்டி இடைத்தேர்தல்களிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெறுவர்கள்” என்று திருமாவளவன்  தெரிவித்தார்.