தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான இராமகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றை எதிர்க்காமல் முழுக்க முழுக்க மத்திய அரசிற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்த இடைத் தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டு சேர்ந்து இருக்கிறது.

ஆகவே இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அந்தவகையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். 

இவ்வாறு ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.