தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும்  மகத்தான் வெற்றி பெறுவார்கள் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும் மகத்தான் வெற்றி பெறுவார்கள் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, ஆனால் எதிர்க்கட்சிகள் என அதிமுக பாஜக அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கருத்து மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை குறிவைத்து அண்ணாமலையின் பேச்சுக்கள் இருந்து வருகிறது.

இது ஒருபுறம் உள்ள நிலையில் தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 எம்பி தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என அண்ணாமலை அறுதியிட்டுக் கூறி வருகிறார். அவரின் பேச்சு திமுகவுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 19. 70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இது துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 113 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் குடிநீருக்காக ரூபாய் 35 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க 143 கோடி டாலருக்கு நிலக்கரி குறைவான விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

அதில் பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு விலைக்கு நிலக்கரி வாங்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்றார். எதிர்காலத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழக முதலமைச்சர் இருப்பார் என்றும் அவர் கூறினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து எழுப்பிய கேள்விக்கு, சிலர் வேலை வெட்டி இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது, வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பாஜக எப்படி எதிர்க்கட்சி ஆகமுடியும்? அண்ணாமலை செய்வது மட்டரகமான அரசியல், இவ்வாறு செந்தில் பாலாஜி விமர்சித்தார்.