கொரோனா பேரிடரில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கும் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து, திமுக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

 

அப்போது, ‘’கொரோனா எனும் பேரிடரை தமிழகம் எதிர்கொண்டு வென்றிட ஒன்றிணைவோம் வா. புயல், மழை, வறட்சி என்றாலும் நாம் கடந்து வராதது எதுவுமில்லை. கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருந்து, கொரோனா பேரிடரில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வலிமையைத் தரும் வகையில் செயல்பட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளின் பசியாற்றுவதே நமது முதன்மையான நோக்கம்.

உயிர்காக்கும் இப்பணியில் அனைவரையும் நம்மோடு ஒருங்கிணைத்துப் பணியாற்றுவோம். கழக செயல்வீரர்கள் எடுத்து

வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் அவர்களுடன் பயணிப்பேன். மக்கள் பணியில் சிரமங்கள், தொல்லைகள், நெருக்கடிகள் ஏற்பட்டால் உடனே எனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்கு எந்தத் துன்பம் வந்தாலும் திமுக காப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பணிகளையும் பார்த்து ‘உங்களில் ஒருவன்’என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

ஊரடங்கால் வருவாய், வேலைவாய்ப்பு இன்றி லட்சக்கணக்கான மக்கள் பசி, பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு கை ஓசையாகாது, தனிமரம் தோப்பாகாது’ என சொல்வது போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும். தமிழக மக்களின் உள்ளன்புடன் கூடிய உதவிதான் சுனாமி பேரிடர் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு, அவர்களின் வாழ்க்கையை மறுக்கட்டமைப்பு செய்து நிமிர வைத்தது. 

சுனாமியை விட பேராபத்தான கொரோனா பேரிடரை தடுக்க ஒவ்வொரு தனிமனிதனும் ஒத்துழைக்க வேண்டும். புயல், சுனாமி, வெள்ளம், தீவிபத்து, பஞ்சம் உள்பட எத்தனையோ பேரிடர்களை , சவால்களை எதிர்கொண்டு நாம் மீண்ட பெருமை மிக்க வரலாறு நமக்கு உண்டு. எனவே, கொரோனா என்ற பேரிடரையும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. கொரோனா வைரஸ் எனும் கொடிய பேரிடரால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியுள்ள இந்தப் பேரிடர் நேரத்தில், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே எனும் பாவேந்தர் பாடிய புகழ்பெற்ற வரிகளை நினைக்க வேண்டியுள்ளது’’என அவர் தெரிவித்தார்.