. திமுக குண்டர்கள் அராஜகம் செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த ஒரு சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாநில சுயாட்சியைப் பேசுகிறது திராவிட மாடல் திமுக அரசு. ஆனால், மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு ஏன் தனியாக இடம் ஒதுக்கவில்லை? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரை திமுகவைச் சேர்ந்த ரவுடிகள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் வரலாற்றுப் பிழை ஆகும். திமுக குண்டர்கள் அராஜகம் செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த ஒரு சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கடும் கண்டனத்துக்கு உரியது. தன்னுடைய குடும்பத்தினரின் தலையீடு தமிழக அரசில் இருக்காது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால், மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், மாநகராட்சி அலுவலகத்தில் தலையீடு உள்ளது. அவர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். மதுரையில் திமுகவின் பிம்பம் மாறியிருக்கிறது என்று சொன்னார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். ஆனால், அவர் தேர்வு செய்த மேயர் அலுவலகத்திலேயே குண்டர்கள் புகுந்து அராஜகம் செய்கிறார்கள். மேயர் அலுவலகத்தில் ரவுடிகளுக்கும் குண்டர்களுக்கும் என்ன வேலை?

மாறாதையா மாறாது.., திமுகவினரின் மனமும் குணமும் மாறாது..( பாட்டு பாடி காட்டினார் செல்லூர் ராஜூ). அத்துமீறலில் ஈடுபட்டு வரும் மேயர் இந்திராணியின் கணவரை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். மாநில சுயாட்சியைப் பேசுகிறது திராவிட மாடல் திமுக அரசு. ஆனால், மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு ஏன் தனியாக இடம் ஒதுக்கவில்லை? திமுகவுக்கு அரசு ஊழியர்கள் வாக்களித்தும் அவர்களுக்கு அல்வா கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் விரோத அரசாக திமுக அரசு இருக்கிறது” என்று செல்லூர் ராஜூ சாடினார்.
