திமுக மூத்த நிர்வாகிகளுடன்  மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 10 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சுமார் 12, 838 உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திமுகவில் பேச்சுவார்த்தை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், பேச்சுவார்த்தை நீண்டது. எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுக தலைவரையும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர். கூட்டணி கட்சிகளைத் திருப்படுத்தும் வகையில் இடப்பகிர்வு இருக்கும் என்று மு.க. ஸ்டாலின் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் உறுதி அளித்தார். இந்நிலையில் மாவட்டங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை இன்றும் தீவிரமாக நடைபெற்றன. இதற்கிடையே திமுக மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையின் போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலினிடம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். மொத்த இடங்களில் சுமார் 10 ஆயிரம் பதவிகளுக்கு திமுக வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சிய இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்று திமுக முடிவு செய்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சில பகுதிகளில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததால், காஞ்சிபுரம், கும்பகோணம், தூத்துக்குடி, திருக்கோவிலூர், விழுப்புரம், கோட்டக்குப்பம், கோவில்பட்டி, மதுராந்தகம் மற்றும் சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள், விளாத்திகுளம், அம்மாபேட்டை, விக்கிரவாண்டி, கடம்பூர், வளவனூர், புதூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மா நகராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.