'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் திமுக் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். திமுக எம்.பி. கனிமொழி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அவர் பொள்ளாச்சியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பொள்ளாச்சியில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகள் குறித்து கனிமொழி கேட்டறிந்தார்.
பின்னர் கனிமொழி விவசாயிகள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில், “திமுக ஆட்சி எப்போதுமே விவசாயிகளுக்கான ஆட்சியாக இருந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மத்திய அரசின் மின் திட்டங்களை அதிமுக அரசு எதிர்த்து. ஆனால், தற்போது அந்தத் திட்டங்களை அதிமுக அரசு ஆதரிக்கிறது.
பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுக்கும். இந்த வேளாண் சட்டத்தை ஆதரித்த பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்தைச் சேர்ந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். வேளாண் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அதிமுக அரசு விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது. விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக திமுக உள்ளது. அதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடகு வைக்கும் வேளாண் சட்டத்தை திமுக எதிர்த்துவருகிறது. இந்தச் சட்டத்தின் காரணமாக அடித்தட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். 
திமுக ஆட்சியில்தான் முன்பு மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு திட்டங்களுக்கு அதிமுக அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் மகளிர் சுய உதவிக் குழு திட்டங்கள் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது விவசாயிகள் பிரச்னை உள்பட எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்” என கனிமொழி பேசினார்.