காடு வெட்டி குருவை  கொலை செய்ய பல முறை திமுக முயற்ச்சி செய்தது அனால் அது நிறைவேறவில்லை என அவரின் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

வன்னியர் சங்கத்தின் மாநிலத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடு வெட்டி குரு உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார். அதையடுத்து அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடு வெட்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அதே கிராமத்திலேயே வன்னியர் சங்கம் சார்பில் அவருக்கு நினைவு மணிமண்டம் அமைக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு மணி மண்டபத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-  காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பின்னர் பாமகவை எப்படியாவது அழித்துவிடலாம் என பலர் கங்கணம் கட்டி செயல்படுகின்றனர் ஆனால் அது ஒரு  போதும் நடக்காது, என்னை சமூகவலைதளத்தில் சிலர் அவமானப்படுத்தி எழுதி வருகின்றனர்.  அவர்கள் வேறு யாருமல்ல நம் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள்தான்.

காரணம் நம் சமூகத்தில் உள்ள இளைஞர்களிடம்  என்னைப்பற்றி தவறாக சொல்லி,  அவர்களை மூளைச் சலவைசெய்து என்னை வசைபாட சில அரசியல்வாதிகள் துண்டி வருகின்றனர். என்னை அப்படிபேச சொல்பவர்களை நான் புறம்போக்குகள் என்றும், ஈனப்பிறவிகள் என்றுந்தான் கூறுவேன், சில சகுனிகளின் சொல்கேட்டு எனக்கு எதிராக செயல்பட நம் சமூகத்திலேயே கங்காணிகள்  உள்ளனர். முதலில் அவர்களைதான் நாம் வேரறுக்க வேண்டும் என்றார். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நம் சமூகம் ஒற்றுமையாக இருந்தால் 112 சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றிபெற்று தமிழகத்தை ஆள முடியும். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை, அதற்கு காரணம் நம் சமூகத்தில் ஒற்றுமையில்லை. நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.நம் சமூகமும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் எனில் அன்புமணி சொல்படி கேளுங்கள் என்றார். 

குரு உயிருடன் இருந்திருந்தால்  மற்றவர்கள் என்னை விமர்சிப்பதை வேடிக்கை பார்த்திருக்க மாட்டார். அவர் நம் சமூகத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்தார் அவரை நாம் இழந்துவிட்டோம். ஒன்றை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் மாவீரன் குரு அவர்களை கொலை செய்ய பலமுறை திமுக முயற்சி செய்தது அதற்கு நம் சமூகத்தில் உள்ள  உள்ளூர் திமுக வாரிசே முயற்ச்சி செய்தார்.  ஆனால் நானும்  நம் கட்சித்தலைவர் கோ.க மணியும் குருவை பாதுகாத்தோம் என்றார். ராமதாசின் இந்த பேச்சு அரசியல் தளத்தில் சூடு கிளப்பியுள்ளது.